உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் 17 சிறுவர்களை சிறைபிடித்த நபர் சுட்டுக்கொலை! : பிணைக்கைதிகள் ஒரு மணி நேரத்தில் மீட்பு

மஹா.,வில் 17 சிறுவர்களை சிறைபிடித்த நபர் சுட்டுக்கொலை! : பிணைக்கைதிகள் ஒரு மணி நேரத்தில் மீட்பு

மும்பை: மஹாராஷ்டிராவில், 17 சிறுவர்கள் உட்பட, 19 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு மணி நேரத்திற்குள் அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள போவாய் பகுதியில், ஆர்.ஏ., ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இங்கு, புதிதாக தயாரிக்கும், 'வெப்' தொடருக்கான, 'ஆடிஷன்' எனப்படும், நடிகர்கள் தேர்வு, கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதற்காக, மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நாள்தோறும் வந்து சென்றனர். ஸ்டூடியோ அமைந்துள்ள, 'மஹாவீர் கிளாசிக்' கட்டடத்தில், வழக்கம்போல் நடிகர்கள் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக, 15 வயது சிறுவர் - சிறுமியர் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கலக்கம் அவர்களை தேர்வு செய்யும் பணியில், ஸ்டூடியோவில் வேலை செய்த ரோஹித் ஆர்யா என்ற நபர் ஈடுபட்டிருந்தார். ஆடிஷனுக்கு வந்த 80க்கும் மேற்பட்டோர் மதியம், 1:00 மணியளவில் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் அங்கு சென்ற, 17 சிறுவர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் வெளியே வராதது, ஸ்டூடியோவுக்கு வெளியே காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்டடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல் வழியே சிறுவர்கள் கூச்சலிட்டதை, அவ்வழியே சென்றவர்கள் கண்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ரோஹித் ஆர்யாவால் கடத்தப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மும்பை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் வந்த போலீசார், சிறுவர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சூழலில், சிறுவர்களை கடத்திய ரோஹித் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'இங்கு, 17 சிறுவர்கள், ஒரு முதியவர் மற்றும் ஒரு நபரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளேன். நான் ஒரு சிலரிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர்கள் பதில் தர வேண்டும். 'அந்த பதிலில் இருந்து நான் கேட்கும் எதிர்கேள்விகளுக்கும் அவர்கள் பதில் தர வேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நான் பயங்கரவாதி அல்ல; எனக்கு பணமும் தேவையில்லை. 'இதை சுமுகமாக நடத்த விரும்புகிறேன். எனக்கு எதிராக சிறிய நடவடிக்கை எடுத்தால் கூட, இந்த இடத்தையே தீ வைத்து கொளுத்திவிடுவேன்' என, மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, ரோஹித் ஆர்யாவுடன் போலீசார் பேச்சு நடத்தினர். இதில் எந்த பலனும் ஏற்படாததை அடுத்து, கட்டடத்தின் பின்னால் இருந்த குளியலறை வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ரோஹித் ஆர்யா, தன்னிடம் இருந்த, 'ஏர் கன்' மூலம் சிறுவர்களை சுட முயன்றார். சுதாரித்த போலீசார், ரோஹித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஹித் உயிரிழந்தார். விசாரணை சம்பவ இடத்தில் இருந்து, துப்பாக்கி மற்றும் சில ரசாயனங்களை பறிமுதல் செய்த போலீசார், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த, 19 பேரையும் பத்திரமாக மீட்டனர். ஒட்டுமொத்த கடத்தல் சம்பவம் ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. மீட்கப்பட்ட சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ரோஹித், ஆர்.ஏ., ஸ்டூடியோவில் வேலை பார்த்தபடியே, 'யு டியூப் சேனல்' ஒன்றை நடத்தி வந்ததும், சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை