ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.,களில் ரூ.65 லட்சம் திருட்டு; திருச்சூர் போலீசாரை திணறடித்த சம்பவம்!
திருச்சூர்: கேரளா, திருச்சூரில் 3 ஏ.டி.ஏம்.,களை கேஸ் கட்டர் பயன்படுத்தி உடைத்த கும்பல் ரூ.65 லட்சத்தை திருடி சென்றனர்.கேரளா கொச்சியின் புறநகர் பகுதியில் உள்ள இரும்பனத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.,மில் ரூ.25 லட்சமும், திருச்சூர் மாவட்டம் கொரட்டியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில் ரூ.10 லட்சத்தை ஒரு கும்பல் திருடி சென்றனர். அதேபோல் திருச்சூரில் ஒரு எ.டி.எம்.,மில் ரூ.30 லட்சமும் காணாமல் போகியுள்ளது. ஒரே கும்பல் திட்டமிட்டு, இன்று (செப்.,27) அதிகாலை 2 மணிக்கு மேல் கேஸ் கட்டர் மூலம் 3 எ.டி.எம்.,களை உடைத்து ரூ.65 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளை நிற காரில் வந்த நான்கு திருடர்கள், இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் அதிகாரி தினேஷ் கூறியதாவது: 3 குற்றங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஏ.டி.எம்.,களில் நுழைந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி., கேமராவில் பெயிண்ட் தெளித்தனர். கேஸ் கட்டர் மூலம் ஏ.டி.எம்., உடைக்கப்பட்டது. காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.