டில்லியில் முகமது ஷெரிப் கைது
துமகூரு: ஹிந்து அமைப்பின் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி முகமது ஷெரிப், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.தட்சிணகன்னடா, சுள்யாவின் பெள்ளாரே கிராமத்தில் 2022 ஜூலை 26ம் தேதி, ஹிந்து அமைப்பின் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டார். இது, மாநிலத்தையே உலுக்கியது. ஹிந்து அமைப்பினர் கொதித்தெழுந்தனர். கொலையாளிகளை கண்டுபிடிக்கும்படி போராட்டம் நடத்தினர்.கொலையில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பினருக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டதால், தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணையில் இறங்கியது. கொலை தொடர்பாக, இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.சமீபத்தில் குற்றவாளிகளின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிரவீன் கொலை வழக்கில் தொடர்புடைய முகமது ஷெரிப், 55, என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவரை பற்றி துப்பு கொடுப்போருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக என்.ஐ.ஏ., அறிவித்தது.இதற்கிடையே முகமது ஷெரிப், வெளிநாட்டில் இருந்து விமானத்தில் டில்லிக்கு வருவதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலையில் அங்கு சென்று, டில்லி விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர்.