உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வாரணாசி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜலிங்கம் தகவல்

 வாரணாசி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜலிங்கம் தகவல்

வாரணாசி: “அயோத்தியில் பாலராமர் கோவில் திறந்தபின், வாரணாசிக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, 14 கோடியை தாண்டி விட்டது,” என, வாரணாசி வருவாய் துறை கோட்ட கமிஷனர் ராஜலிங்கம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர், 2006ல், உ.பி., பிரிவு ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், மீண்டும் தேர்வு எழுதி, 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்று, உ.பி.,யின் வாரணாசியில் கோட்ட கமிஷனராக தற்போது பணியாற்றி வருகிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக, தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களுக்கு, அவர் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்திற்கும் காசிக் கும் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் காசிக்கு நடந்து வந்து, சீடர்களுக்கு வேதங்களை கற்பித்துள்ளார். காசிக்கு வரும் பக்தர்கள், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். காசி என அழைக்கப்படும் வாரணாசி நகரம், தெருக்கள் நிறைந்தது; மக்கள் அடர்த்தியும் அதிகம். இங்கு, 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். தற்போது தினசரி பக்தர்களின் வருகை, 2 லட்சத்தை தாண்டி விட்டது. கடந்த ஆண்டு வாரணாசிக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை, 11 கோடியாக இருந்தது. அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்புக்கு முன், ஆண்டுக்கு, ஒரு கோடி பக்தர்களே வந்து சென்றுள்ளனர். அக்கோவில் திறப்புக்கு பின், பக்தர்களின் வருகை பல கோடியை தாண்டி விட்டது. அதன்படி, இந்த ஆண்டில், செப்., வரை, பக்தர்களின் வருகை, 14 கோடியை தாண்டி விட்டது. பிரதமர் மோடியின் ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன்படி, காசிக்கும், தமிழகத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க இணைப்பை வலுப்படுத்தும் விதமாக, நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. சங்கமத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடத்தப்படும். அதற்காக, வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ் கற்க, தமிழகம் செல்ல உள்ளனர். ஆசியாவிலேயே முதன்முதலாக வாரணாசியில் பிரதமர் மோடி, 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'ரோப் கார்' திட்டத்தை, 2023ல் துவக்கி வைத்தார். இப்பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. ரோப் கார் சேவை, வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை இயக்கப்படுகிறது. இச்சேவை காரணமாக, 16 நிமிடங்களில் கோவிலுக்கு சென்று விடலாம். சாலை மார்க்கமாக சென்றால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suresh
டிச 16, 2025 19:14

சோளிங்கரில் திமுக அமைத்த ரோப் கார் ஒருவழி அமைப்பு ஆகும். மாறாக காசியில் அமைந்த ரோப்கார் இருவழி அமைப்பு ஆகும். தரத்திலும் மிகவுயர்ந்தது. எனவே திமுக ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் மந்திரிக்கு ரோப்கார் திட்டத்தால் நல்ல வேட்டை


T MANICKAM
டிச 16, 2025 17:48

மோடி தேசிய தலைவர் அவரின் செயல்பாடு சூப்பர் எல்லா மாநில மக்களின் மாபெரும் தலைவன். பாரத நாட்டின் சிறந்த மக்கள் தலைவன் . ஜெய் ஹிந்து .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை