'அடுத்த பெனசிர் புட்டோ' என, பாகிஸ்தான் மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறார், ஹினா ரப்பானி கர். தற்போது பாகிஸ்தானின், மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சராக, இவர் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம், பாகிஸ்தானின் மிக இளவயது அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பேற்கும் முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது.
34 வயதே நிரம்பிய ஹினா, இந்திய அமைச்சருடன் பேச்சு நடத்துவதற்காக, சமீபத்தில் டில்லிக்கு வந்தபோது, மீடியாக்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். பாக்., கலாசாரத்தை மறக்காத உடை, ஸ்டைலான ஒப்பனை என, கலக்கினார். காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்கள், அவர் கையில் பிடித்திருந்த கைப்பை, ஆகியவற்றின் மதிப்பு மட்டும், 17 லட்சம் ரூபாய். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான குலாம் முஸ்தபா கரின், உறவுப் பெண் இவர். இவருக்கு சொந்தமாக, லாகூரில் ஓட்டல் உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குலாம் நூர் ரப்பானியின் மகள் தான், ஹினா. இந்த அடிப்படையில் தான், இவருக்கும் வெளியுறவுத் துறை கிடைத்தது என்றும், பாகிஸ்தானில் பேச்சு உண்டு. லாகூர் பல்கலையில் வர்த்தக படிப்பு படித்தவர். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் முதுநிலை பட்டம் பெற்றார். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில், ஹினாவுக்கு ஆர்வம் அதிகம்.
இவரது கணவரின் பெயர் பெரோஸ் குல்சார். இவர், ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 2008ல் நடந்த தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், பார்லிமென்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் நிதித் துறை இணை அமைச்சராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பதவி வகித்த ஹினாவுக்கு, தற்போது கேபினட் அமைச்சராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
தனக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன என்பதை நன்கு அறிந்தவர், ஹினா. அமைச்சகம் தொடர்பாக, இவரை சந்திக்க விரும்புவோர், இவரின் செயலர்களையோ, மற்ற அதிகாரிகளையோ, நாட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக, ஹினாவுக்கே, போனில் தொடர்பு கொண்டு பேசலாம். உடனடியாக அதற்கு பதிலளித்து விடுவார்.வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இந்தியாவில் தான் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அமைச்சகம் தொடர்பான விவகாரங்களில், அவரது செயல்பாடுகளில் சிறிய அளவில் குறைகள் கூறப்பட்டாலும், தற்போது தான் அவர் பதவியேற்றுள்ளார் என்பதால், சில நாட்கள் கழித்து, தன் வேலைகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் என, அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். பெனசிருக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ள பெண் அரசியல்வாதியாக, ஹினா உருவெடுத்துள்ளதால், பாகிஸ்தானின் தலைமைப் பதவியை இவர் பிடித்தாலும், ஆச்சர்யமில்லை என்கின்றன, பாக்., அரசியல் வட்டாரங்கள்.
நமது சிறப்பு நிருபர்