| ADDED : நவ 22, 2025 12:31 AM
புதுடில்லி: தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், மன ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளிக்கு வெளியே நேற்று போராட்டம் நடத்தினர். புதுடில்லி செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர், 18ம் தேதி மதியம் 2:30 மணிக்கு ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாம் தள நடைமேடையில் இருந்து குதித்து தற் கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பள்ளிக்கு வெளியே நேற்று காலையில், மாணவரின் பெற்றோர், குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டனர். மாணவனை மனரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இறந்த மாணவர் குடும்பத்தின் நண்பர் அர்ச்சனா கூறுகையில், “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து, போலீசில் ஒப்படைக்க வேண்டும்,” என்றார். மாணவரின் மாமா சந்திரஷில் தவான் கூறியதாவது: இந்த விவகாரத்தில் அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழு பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். பள்ளி மாணவ - மாணவியர் பல திசைகளிலிருந்தும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள், குறிப்பாக பத்தாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வு எழுதுவோரை பொறுமையுடனும், கவனமாகவும் ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை. எங்கள் குடும்பத்து குழந்தைக்கு ஏற்பட்ட நிலை, இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் கூறுகையில், “தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன்னை மனரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்,” என்றனர். 4 பேர் 'சஸ்பெண்ட்' செயின்ட் கொலம்பா பள்ளியில் இருந்து, கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகள் பதிவாகியுள்ள டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். தற்கொலை செய்த மாணவனுடன் படித்த சில மாணவர்களிடன் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.