உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டம் - ஒழுங்கு பிரச்னை சபையில் விவாதிக்க அனுமதி மறுப்பு

டில்லி சட்டம் - ஒழுங்கு பிரச்னை சபையில் விவாதிக்க அனுமதி மறுப்பு

விக்ரம்நகர்:“டில்லி அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சட்டம் - ஒழுங்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்க முடியாது,” என, சபாநாயகர் விஜேந்தர் குப்தா மறுத்துவிட்டார்.டில்லியின் எட்டாவது சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விவாதம் நடந்து வருகிறது.டில்லி சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அனுமதி கோரி, சபாநாயகர் விஜேந்தர் குப்தாவிடம் எதிர்க்கட்சித் தலைவரான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஆதிஷி சிங் கடிதம் கொடுத்திருந்தார்.நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி பேசியது:எம்.எல்.ஏ.,க்கள் எப்போதும் தங்கள் தொகுதி பிரச்னையை எழுப்பி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, துப்பாக்கிச்சூடு, பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் குறித்த விவாதங்கள் சட்டசபையில் தடுக்கப்படுகின்றன.டில்லியில் சட்டசபையில் அமர்ந்திருக்கும் 70 உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்த பிரச்னையை எழுப்ப முடியாவிட்டால், யார் தான் எழுப்புவார்கள்?டில்லியில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதன் தோல்வியை மறைக்கவே, இதுகுறித்த விவாதங்களை அடக்க மாநில அரசு முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வரும் அவர் கோரிக்கையை நிராகரித்து, சபாநாயகர் நேற்று சட்டசபையில் அளித்த பதில்:எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸ்கள், மாநில அரசின் வரம்புக்கு உட்பட்ட பிரச்னைகள் சம்பந்தமாக இருக்க வேண்டும்.சட்டம் - ஒழுங்கு பிரச்னை டில்லி அரசின் அதிகார வரம்புக்குள் வராது. எனவே நம் கட்டுப்பாட்டில் இல்லாத சட்டம் - ஒழுங்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்க முடியாது.மாசுபாடு, சுகாதாரம், டெங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பொது நலப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதை ஏற்க முடியாது.சபையில் ஆரோக்கியமான மற்றும் ஜனநாயக ரீதியிலான விவாதங்களை நான் எப்போதும் வரவேற்பேன். இருப்பினும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவும், ஊடகங்களில் சுய லாபத்திற்காக சபையின் நேரத்தை வீணடிப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த விவாதங்களையும் நான் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை