உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வுடன் இணைவதை பினராயி தடுத்தார்

தி.மு.க.,வுடன் இணைவதை பினராயி தடுத்தார்

திருவனந்தபுரம்: ''என் தலைமையிலான அமைப்பு, தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவதை முதல்வர் பினராயி விஜயன் தடுத்தார்,'' என கேரள எம்.எல்.ஏ., அன்வர் குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பி.வி.அன்வர். காங்கிரஸ் பாரம்பரிய பின்னணி உடைய அன்வர், கடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றிருந்த அவர், அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை தெரிவித்ததை அடுத்து, அதிலிருந்து விலகினார். அவ்வப்போது முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அன்வர், கேரள ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பை துவங்கினார். இந்த அமைப்பு, தமிழகத்தில் உள்ள தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக அக்கட்சியினருடன் அவர் சில மாதங்களுக்கு முன் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு தி.மு.க., ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க., தன் இயக்கத்தை இணைத்துக் கொள்ளாததற்கு முதல்வர் பினராயி விஜயனே காரணம் என அவர் குற்றஞ்சாட்டிஉள்ளார். இது குறித்து அன்வர் மேலும் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக பேசிய பினராயி விஜயன், என் அமைப்பை தி.மு.க.,வுடன் இணைக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார். ''இதனால், அவர்களிடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. திரிணமுல் காங்கிரஸ் உட்பட மேலும் நான்கு தேசிய கட்சிகளுடன் என் இயக்கத்தை இணைப்பது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன். திரிணமுல் காங்., உடன் இணைந்தால், தென் மாநிலங்களில் கம்யூனிசத்துக்கு எதிரான நிலை உருவாகும்,'' என, தெரிவித்தார். தி.மு.க.,வுடனான கூட்டணி பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து, தேசிய அரசியல் கட்சிகளை அன்வர் நாடிச் செல்வதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை