| ADDED : மார் 19, 2025 05:02 AM
புதுடில்லி : ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் சாகேத் கோகலே அளித்துள்ள பதில்:அரசு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ், 2020 முதல் 2025 வரை, 25 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சி உட்பட, 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விடும் பணி, 2025 - 2026ம் நிதியாண்டில் முடிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன், லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களும் ஒரு தொகுப்பாக வழங்கப்படும். இதனால், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் லாபம் ஈட்டுவதாக மாற்றப்படும். விமான நிலையங்களை தனியார் நிர்வகிக்க குத்தகை விடும் மூன்றாம் கட்டத்தில், திருச்சி உட்பட, 11 விமான நிலையங்கள் உள்ளன. உதாரணத்துக்கு வாரணாசியுடன், நஷ்டத்தில் இயங்கும் குஷிநகர் மற்றும் கயா விமான நிலையங்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்படும். அதுபோல, புவனேஸ்வர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களுடன், நஷ்டத்தில் இயங்கும் ஹூப்பள்ளி மற்றும் காங்ரா விமான நிலையங்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்படும். ராய்ப்பூர் மற்றும் திருச்சியுடன், நஷ்டத்தில் இயங்கும் அவுரங்காபாத் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை விமான நிலையங்களும், 25 விமான நிலையங்கள் பட்டியலில் உள்ளன.