2 முறை ரசாயனம் தண்ணீரில் வீசி வெடித்த ட்ரோன் பிரதாப்
துமகூரு: பண்ணை குட்டையில் ரசாயனத்தை வீசி வெடிக்க செய்ததாக கைதான பிக்பாஸ் வெற்றியாளர் ட்ரோன் பிரதாப், இதற்கு முன்பும் இரு முறை ரசாயனத்தை வெடிக்க செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.கன்னட பிக்பாஸ் 11வது சீசன் வெற்றியாளர் ட்ரோன் பிரதாப். இவர், துமகூரின் மதுகிரி மிடிகேஷி கிராமத்திற்குச் சென்றார். ஒரு பாட்டிலில் ரசாயனத்தை ஊற்றி, அதை பண்ணை குட்டையில் இருந்த தண்ணீரில் துாக்கி வீசினார். சிறிது நேரத்தில் அந்த ரசாயனம் வெடித்தது. இதை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பிரதாப் பதிவு செய்தார்.வீடியோ வேகமாக பரவிய நிலையில், மிடிகேஷி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 12ம் தேதி இரவு அவரை கைது செய்தனர். நேற்று முன் தினம் மதுகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று நாட்கள் காவலில் எடுத்தனர்.ரசாயனத்தை வீசிய பண்ணை குட்டைக்கு அழைத்துச் சென்று பிரதாப்பிடம் விசாரித்தனர். “இதற்கு முன்பும் இரு முறை ரசாயனத்தை, தண்ணீரில் வீசி வெடிக்க செய்து வீடியோ போட்டேன். அதற்கு பணம் கிடைத்தது. ஆனால் அப்போது ரசாயனத்தை குறைவாக ஊற்றினேன். இந்த முறை நிறைய ஊற்றி வெடிக்க வைத்தேன். வீடியோவை நிறைய பேர் பார்த்தால், பணம் நிறைய கிடைக்கும். அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய நினைத்தேன்,” என, போலீசாரிடம் பிரதாப் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.