உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாட்டரி மார்ட்டினிடம் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனத்தின் ஆய்வுக்கு தடை

லாட்டரி மார்ட்டினிடம் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனத்தின் ஆய்வுக்கு தடை

புதுடில்லி: 'லாட்டரி தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின் மற்றும் அவருடைய ஊழியர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை பார்க்கவோ, நகல் எடுக்கவோ கூடாது' என, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த சான்டியாகோ மார்ட்டின், நாடு முழுதும் லாட்டரி தொழிலில் ஈடுபட்டுள்ளார். 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் அவர் நடத்தும் நிறுவனம், மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேகாலயா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. மார்ட்டினுக்கு சொந்தமான, ஆறு மாநிலங்களில் உள்ள, 22 இடங்களில், அமலாக்கத்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.அப்போது, 12.41 கோடி ரூபாய் ரொக்கம், மார்ட்டினின் மொபைல்போன், அவருடைய ஊழியர்களின் லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ய தடை கேட்டு, மார்ட்டின் மற்றும் அவருடைய நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வு, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை பார்க்கவோ, நகல் எடுக்கவோ கூடாது என, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும், மின்னணு சாதனங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்வதை எதிர்த்து, ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, வரும், பிப்., 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

visu
ஜன 03, 2025 15:37

எந்த வழக்கும் முடிவுக்கு வரக்கூடாது உச்ச நீதிமன்றம் இதுபோன்றகுழப்பங்களை செய்யக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை