மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
கோல்கட்டா, சந்தேஷ்காலியில் தொடரும் போராட்டம்
'சந்தேஷ்காலியில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைதுாக்கி இருப்பதை யடுத்து, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என, பட்டியல் ஜாதியினருக்கான தேசிய கமிஷன் ஜனாதிபதியிடம் நேற்று பரிந்துரை செய்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதி யின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக். வன்கொடுமை
இவரும், இவரது கூட்டாளிகளும் அப்பகுதி யினரிடம் பலவந்தமாக நிலங்களை கைப்பற்றியதாகவும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலியைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.சந்தேஷ்காலிக்கு நேரடியாக வருகை தந்த மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், போராடும் பெண்களை சந்தித்து பேசினார்.சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுங்கட்சியினர், சந்தேஷ்காலியில் ரவுடிகளுடன் கைகோர்த்து அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் சிறப்பு அதிரடி படை மற்றும் சிறப்பு விசாரணை குழு அமைக்க உள்ளூர் மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அளித்தார்.இதற்கிடையே, பட்டியல் ஜாதியினருக்கான தேசிய கமிஷன் தலைவர் அருண் ஹல்தர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், சந்தேஷ்காலிக்கு நேற்று முன்தினம் சென்று, பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசினர்.அதை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து நேற்று அறிக்கை அளித்தனர். அதில், சந்தேஷ்காலியில் அரங்கேறிய அராஜகம், வன்கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து விரிவாக விவரித்துள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அனுமதி மறுப்பு
சந்தேஷ்காலியின் நிலவரத்தை ஆய்வு செய்ய, மத்திய இணை அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, பிரதிமா பவுமிக் உள்ளிட்டோர் அடங்கிய ஆறு எம்.பி.,க்கள் குழுவை பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்தார். இந்த குழு, நேற்று சந்தேஷ்காலிக்கு சென்றது. தடுத்து நிறுத்தம்
வழியில் ராம்பூரில் போலீசார் அக்குழுவை தடுத்து நிறுத்தி, மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். சந்தேஷ்காலியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், அங்கு செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அக்குழுவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தேஷ்காலியில் போராடும் பெண்களை சந்திக்க வந்த மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ராம்பூரில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார்.சந்தோஷ்காலியின் செல்வாக்குமிக்க ஆளுங்கட்சி பிரமுகரான ஷாஜஹான் ஷேக் என்பவரது வீட்டில், ரேஷன் ஊழல் தொடர்பாக சோதனை நடத்த, அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் 5ம் தேதி சென்றனர். ஷாஜஹான் ஷேக்கின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, கண்மூடித்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அதிகாரிகள், அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடினர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஷாஜஹான் ஷேக்கால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலியை சேர்ந்த பெண்கள், அவர் மீதான புகார்களை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவிக்க துவங்கினர்.ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இறால் பண்ணை துவங்குவதற்காக, கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தவர்களின் நிலங்களை அபகரித்ததாகவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தனர்.சந்தேஷ்காலியில் வீடு வீடாகச் சென்று, இளம் பெண்கள், திருமணமான பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, கட்சி அலுவலகத்தில் பல நாட்கள் தங்க வைத்து ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.ஷாஜஹானுடன் சேர்ந்து திரிணமுல் காங்., பிரமுகர்கள் உத்தம் சர்தார் மற்றும் ஷிபாபிரசாத் ஹஸ்ரா ஆகியோரும் தங்களை கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.ஷாஜஹான் தலைமறைவாக இருப்பதால், பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட, இப்போது வாய் திறக்க தைரியம் வந்தததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.ஷாஜஹான் ஷேக் மற்றும் ஷிபாபிரசாத் ஹஸ்ராவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கடந்த எட்டு நாட்களாக சந்தேஷ்காலி பெண்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago