உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  திரிணமுல் காங்., குற்றச்சாட்டுக்கு பதிலடி: கவர்னர் தலைமையில் வெடிகுண்டு சோதனை

 திரிணமுல் காங்., குற்றச்சாட்டுக்கு பதிலடி: கவர்னர் தலைமையில் வெடிகுண்டு சோதனை

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சிக்கு பதிலடி தரும் வகையில், கவர்னர் ஆனந்த போஸ், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து, தன் மேற்பார்வையிலேயே கவர்னர் மாளிகைக்குள் சோதனை நடத்தினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபத்தில் பிரமாண்ட நடைபயணம் மேற்கொண்டார். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு ஆதரவாக, மாநில கவர்னர் ஆனந்த போஸ் கருத்து தெரிவித்தார். இதனால், ஆவேசமடைந்த திரிணமுல் காங்., - எம்.பி., கல்யாண் பானர்ஜி, 'பா.ஜ., குற்றவாளிகளுக்கு கவர்னர் மாளிகையில் கவர்னர் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை கொடுத்து, திரிணமுல் தொண்டர்களை தாக்க சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும்' என விமர்சித்து இருந்தார். இதற்கு கவர்னர் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக கூறியிருந்தது. அதே சமயம், 'பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் கவர்னர் மாளிகை கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து சோதித்து பார்க்கட்டும்' என கவர்னர் போஸ் பதிலடி கொடுத்து இருந்தார். இதைத் தொடர்ந்து, கொல்கட்டா போலீஸ் உயரதிகாரிகள், மத்திய படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படை ஆகியவற்றை வரவழைத்து, கவர்னர் மாளிகைக்குள் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என, கவர்னர் போஸ் சோதனை செய்ய வைத்தார். இந்த சோதனையின்போது பொதுமக்கள், பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு சோதனை ஊடகங்களில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !