தார்வாட் : அதிக லாபம் ஆசை காண்பித்து, டாக்டர் ஒருவரிடம் 1.79 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தேடுகின்றனர்.தார்வாடை சேர்ந்த 45 வயது நபர், டாக்டராக பணியாற்றுகிறார். சில நாட்களுக்கு முன்பு, இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், தன்னை நிதி ஆலோசகர் என, அறிமுகம் செய்து கொண்டார். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிகமான லாபம் பெறலாம். குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால், கணிசமாக லாபம் கிடைக்கும் என, ஆசை காண்பித்தார்.அதிக லாபத்துக்கு ஆசைப்பட்ட டாக்டர், முதலீடு செய்ய முடிவு செய்தார். அதன்பின் தன் வங்கிக் கணக்கு விபரங்களை, பகிர்ந்து கொண்டார். இந்த கணக்குகளில் இருந்த 1.79 கோடி ரூபாயை, அந்நபர் தன் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொண்டார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர், சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சைபர் குற்றவாளிகள், பல வழிகளில் மக்களை ஏமாற்றுகின்றனர். விழிப்புடன் இல்லையென்றால், பணத்தை இழக்க வேண்டி வரும். சமீப ஆண்டுகளாக நன்கு படித்து, உயர் பதவியில் உள்ளவர்களே, சைபர் மோசடிக்கு ஆளாகின்றனர்.அறிமுகம் இல்லாத நபர்களிடம், யாரும் தங்கள் தனிப்பட்ட விபரங்கள், வங்கி கணக்கு விபரங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, வங்கி கணக்கு விபரங்களை அறிமுகமில்லாதவரிடம் கூறிய டாக்டர், 1.79 கோடி ரூபாயை இழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.பொதுமக்கள் இனியாவது, விழிப்புடன் இருக்க வேண்டும். போலீசார் இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.