மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
11 hour(s) ago | 21
கோல்கட்டா, சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், குறிப்பிட்ட நேரத்தில் ஒப்படைக்காமல், மேற்கு வங்க அரசு இழுத்தடிப்பு செய்தது. இறுதியில் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி. ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக இந்தப் பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க, கடந்த, ஜன., 5ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், ஷேக்கின் ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கினர். மக்கள் போராட்டம்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு புகார்கள் வெளிவரத் துவங்கின. சந்தேஷ்காலியில், பழங்குடியின மக்களை மிரட்டி, நிலங்களை ஷாஜஹான் ஷேக், தன் ஆதரவாளர்கள் உதவியுடன் பறித்துள்ளார். மேலும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு எதிராக, மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.நீண்ட இழுபறிக்குப் பின், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்., 29ல் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கட்சி அவரை சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக, மேற்கு வங்க போலீசின் சி.ஐ.டி., எனப்படும் குற்றவியல் விசாரணைப் பிரிவு வழக்குப் பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது.அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சி.பி.ஐ., சார்பில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதன்படி, ஷாஜஹான் ஷேக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, கோல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசு, உச்ச நீதிமன்றம் சென்றது. இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியதாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை சார்பில் நேற்று மீண்டும் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் எந்த இடைக்கால தடையும் விதிக்காததால், ஷாஜஹான் ஷேக்கை மாலை 4:00 மணிக்குள், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பரிசோதனை
இதன்படி, சி.பி.ஐ., அதிகாரிகள், சி.ஐ.டி., தலைமையகத்துக்கு சென்றனர். ஆனால், உடனே ஒப்படைக்காமல் தாமதம் செய்யப்பட்டது. இறுதியில், 6:48 மணிக்கு அவரை ஒப்படைத்தனர்.இதைத் தொடர்ந்து, உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு, சி.ஐ.டி., போலீஸ் தரப்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரை அழைத்துச் சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், மற்றொரு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன்பின், கோல்கட்டாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை, தேசிய பெண்கள் கமிஷன் நிர்வாகிகள் நேற்று சந்தித்து, சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பான அறிக்கையை கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்தேறியுள்ளன. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் திரிணமுல் காங்., அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு பெண்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டுள்ளது. அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனாலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷாஜஹான் ஷேக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை சீர் செய்யும் வகையில், அங்கு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11 hour(s) ago | 21