உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி மைசூரு சாண்டல் ஆலைக்கு சீல்: ரூ.2 கோடி மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்

போலி மைசூரு சாண்டல் ஆலைக்கு சீல்: ரூ.2 கோடி மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக அரசு சார்ந்த மைசூரு சாண்டல் சோப்புகளை போலியாக தயாரிக்கும் ஆலை, ஆந்திர மாநிலத்தில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் கர்நாடக அரசின் கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு சந்தன சோப்பு, குழந்தைகளுக்கான எண்ணெய், சோப்பு, கிரீம், அழகு சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

நடவடிக்கை

இவை தரமானவை என்பதால், இவற்றுக்கு அதிக கிராக்கி உள்ளது. மைசூரு சாண்டல் சோப்பு, இந்த தொழிற்சாலைகளில் ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில், போலியான மைசூரு சந்தன சோப்புகள், ஹைதராபாத் சந்தைகளில் விற்கப்படுவதாக, கே.எஸ்.டி.எல்., தலைவரும், கனரக, நடுத்தர தொழில் துறை அமைச்சருமான எம்.பி.பாட்டீலுக்கு, சமீபத்தில் தொலைபேசியில் தகவல் வந்தது. இதை தீவிரமாக கருதிய அமைச்சர், மைசூரு சந்தன சோப்புகள் போலியாக தயாரிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி கே.எஸ்.டி.எல்., தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் பிரசாந்துக்கு உத்தரவிட்டார்.நிர்வாக இயக்குனர், ஹைதராபாதின் செகந்திராபாதில் உள்ள, கே.எஸ்.டி.எல்., தொழிற்சாலையின் அதிகாரப்பூர்வ விற்பனை கடை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து, போலியான சோப்புகள் விற்பனையை கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஹைதராபாதின் சில இடங்களில் போலியான சோப்புகள் விற்பனை செய்வது தெரிந்தது. ஆனால், இவர்களுக்கு போலியான மைசூரு சந்தன சோப்புகளை சப்ளை செய்வது யார் என்பது தெரியவில்லை.

தீவிர விசாரணை

இதை கண்டுபிடிக்கும் முயற்சியில், கே.எஸ்.டி.எல். அதிகாரிகள் இறங்கினர். சோப்பு சப்ளை செய்யும் ராகேஷ் ஜெயின், மகாவீர் ஜெயினை கண்டுபிடித்த அதிகாரிகள், அவை எங்கே தயாராகின்றன என்பதை தெரிந்து கொள்ள, தாங்களே சோப்பு வாங்க முடிவு செய்தனர்.முதலில் 1 லட்சம் ரூபாய் கொடுத்து, சந்தன சோப்புகள் வாங்கினர். அதன்பின் பொங்கல் பண்டிகை என்பதால், அதிகம் தேவைப்படுகிறது என கூறி, 25 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர்.தாங்களே தொழிற்சாலைக்கு வாகனம் கொண்டு வந்து, பொருட்களை ஏற்றிச் செல்வதாக கூறினர். இதை நம்பிய ராகேஷ் ஜெயின், மகாவீர் ஜெயின் ஆகியோர், போலியான சோப்புகள் தயாரிக்கும், ஹைதராபாதின் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று, அதிகாரிகளின் வலையில் விழுந்தனர்.அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டு, உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, கே.எஸ்.டி.எல்., நிர்வாக இயக்குனர் பிரசாந்த் நேற்று கூறியதாவது:சோப்பு வாங்குவதாக நடித்து, போலியான மைசூரு சாண்டல் சோப்பு தயாரித்த தொழிற்சாலையை கண்டுபிடித்தோம். பெட்டி பெட்டியாக போலியான சோப்புகள் இருந்தன. தொழிற்சாலையில் தலா 150 கிராம், 75 கிராம் எடையுள்ள 11,200 சோப்புகள், சோப்புகள் வைக்கும் 800 காலி பாக்ஸ்கள் உட்பட, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.மைசூரு சாண்டல் சோப் பெயரில், போலியான சோப்புகளை தயாரித்து, விற்பனை செய்த ராகேஷ் ஜெயின், மகாவீர் ஜெயின் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி