| ADDED : நவ 25, 2025 09:13 PM
திருவனந்தபுரம்: எஸ்ஐஆர் பணிகளில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது விதிமீறல் என்று கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கம், தமிழகம் போன்று கேரளாவிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் வேகம் எடுத்து உள்ளன. கேரளாவில் இந்த பணிகளுக்காக பள்ளிகளில் உள்ள என்சிசி, என்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ள தன்னார்வலர்களை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் இருந்து கல்வி நிலையங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந் நிலையில், எஸ்ஐஆர் பணிகளில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது விதிமீறல், இது அவர்களின் கல்வியை பாதிக்கும் என்று கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; பள்ளி இறுதித் தேர்வுகள் நெருங்கி வருவதால் அனைத்து பள்ளிகளிலும் அதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்காக மாணவர்களை 10 நாட்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.இது அவர்களின் கல்வியை பாதிக்கும். தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? என்எஸ்எஸ்,.என்சிசி தன்னார்வலர்கள் சமூக சேவை நடவடிக்கைகளுக்காக ஊக்குவிக்கப்பட்டாலும் அதில் அவர்களை நீண்ட நாட்களுக்கு ஈடுபடுத்த முடியாது.பள்ளியில் படிக்கும் நேரங்களில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.வகுப்புகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படக் கூடாது என்ற உத்தரவு இப்போதும் உள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்காக கல்வித்துறை முழு ஒத்துழைப்பை ஏற்கனவே அளித்து வருகிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் உள்பட 5623 பேரை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமித்துள்ளோம்.இவ்வாறு அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.