உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைக்கு வந்தது ராஜ்யசபாவோடு போச்சு: சவுமித்ரா சென் "எஸ்கேப்

தலைக்கு வந்தது ராஜ்யசபாவோடு போச்சு: சவுமித்ரா சென் "எஸ்கேப்

புதுடில்லி: கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென்னின் ராஜினாமாவை, ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதை அடுத்து, லோக்சபாவில், அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கை கைவிடப்பட்டது. கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இருந்த சவுமித்ரா சென், அதற்கு முன், கோல்கட்டா ஐகோர்ட் ரிசீவராக இருந்தார். அப்போது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் 18ம் தேதி, சவுமித்ரா சென் மீது, ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, சவுமித்ரா சென், தனது சார்பாக, தானே ஆஜராகி, வாதாடினார். இதையடுத்து, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன், ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவிலும் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று, கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. லோக்சபாவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சவுமித்ரா சென், நீதிபதி பதவியில் இருந்து, நீக்கப்படும் சூழல் ஏற்படும். இந்நிலையில், அதற்கு முன்பாகவே, நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, அதுகுறித்து ஜனாதிபதிக்கு, 'பேக்ஸ்' அனுப்பி வைத்தார், சவுமித்ரா சென். எனினும், இந்த ராஜினாமா கடிதத்தை, சவுமித்ரா சென், தன் கைகப்பட எழுதவில்லை என்பதால், இதை ஏற்க முடியாது என, ஜனாதிபதி பிரதிபா அறிவித்தார். இதையடுத்து, சவுமித்ரா சென், தன் கைப்பட எழுதிய கடிதத்தை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதை ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி அறிவித்ததை அடுத்து, லோக்சபாவில், அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் நேற்று, விரிவான ஆலோசனை நடத்தினர். லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், அரசு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார். இதன்பின், நேற்று மதியம் லோக்சபாவில் இதுகுறித்து, சிறிய அறிக்கை ஒன்றை, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் படித்தார். அதில்,'சவுமித்ரா சென் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதை, இந்த சபையின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்' என்றார். இதையடுத்து, சவுமித்ரா சென் மீதான கண்டனத் தீர்மானம் கைவிடப்படுவதற்கு, குரல் ஓட்டெடுப்பு மூலம், சபை ஒப்புதல் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை