| ADDED : நவ 21, 2025 01:00 AM
பால்கர்: மஹாராஷ்டிராவின் தனியார் பள்ளியில், 100 முறை தோப்புக்கரணம் போட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, 12 வயது மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வாசை பகுதியில் அனுமந்த் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆறாம் வகுப்பில் படித்த 12 வயது மாணவி, பள்ளிக்கு, 10 நிமிடங்கள் தாமதமாக சென்றுள்ளார். இதையடுத்து அவரை, 100 முறை தோப்புக்கரணம் போடும்படி பள்ளி ஆசிரியை உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முதுகில் புத்தகப் பையை சுமந்தபடியே, 100 முறை தோப்புக்கரணம் போட்ட அம்மாணவிக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்ததும், உடல்நிலை இன்னும் மோசம டைந்ததால், நலசோபராவில் உள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாணவி மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தண்டனை அளித்த பள்ளி ஆசிரியையை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரி யையை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு தண்டனை அளித்த ஆசிரியையை கைது செய்தனர்.