உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி!

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கிடுக்கி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது. மேலும், அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் மேற்கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மறுபுறம் இதே மாதரியான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை' என கூறி, த.வெ.க., தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

மேல் முறையீடு

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், விஜய் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகவும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதற்கு எதிராகவும், த.வெ.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே வேளையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் தந்தை பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், பா.ஜ., வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் சார்பில், சி.பி.ஐ., விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரிக்கப்பட்டன. அப்போது, போலீசார் கேட்டுக் கொண்டதால் தான் சம்பவம் நடந்த இடத்திலிருந்து விஜய் புறப்பட்டு சென்றதாகவும், இதை கவனத்தில் கொள்ளாமல் அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததாகவும் த.வெ.க., சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கான தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வெளியிட்டனர்.

குடிமக்கள் உரிமை

தீர்ப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கரூர் துயர சம்பவத்தை மக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். 'பாரபட்சம் இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடக்க வேண்டும்' என கேட்பது குடிமக்களின் உரிமை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறோம். சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, சிறப்பு குழுவையும் அமைக்கிறோம். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், தமிழகத்தைச் சாராத இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அந்த சிறப்பு குழுவில் இடம் பெறுவர். மூன்று பேர் அடங்கிய சிறப்பு குழு, கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் சிறப்பு குழு, எந்த நேரத்திலும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். சி.பி.ஐ., தங்கள் மாதாந்திர விசாரணை அறிக்கையை, சிறப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மிகப்பெரிய சதி

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை' என கூறியுள்ளதாக தெரிவித்தார். 'தங்களது பெயரில் போலியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. அவர்கள் இருவரும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகி உள்ளனர். நீதிபதிகள் நேரடியாக அவர்களிடமே விசாரிக்கலாம்' என வாதிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரும்பினால், தனியாக மனு தாக்கல் செய்யலாம்; தேவைப்பட்டால், அதையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர். அதன் பின், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த பிறகும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, எதற்காக சிறப்பு விசாரணை குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது? இந்த விவகாரம் உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வருகிறது. அவ்வாறு இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் ஏன் இந்த விவகாரத்தை விசாரித்தது? வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்த ஒரு வழக்கை, கிரிமினல் வழக்காக மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 'இந்த வழக்கை முடித்து வைக்கவில்லை' என தெளிவுப்படுத்திய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்' என உறுதியுடன் தெரிவித்தனர். தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் * கரூரில், த.வெ.க., நடத்திய பிரசார நிகழ்ச்சி நடந்த இடத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வேறு ஒரு கட்சிக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது * இந்த விவகாரம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகள் ஊடகங்களிடம் அரசியல் தொனியில் பேசியது, சுதந்திரமான விசாரணை நடைபெறுமா என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுகிறோம் * சி.பி.ஐ., இயக்குநர் உடனடியாக மூத்த அதிகாரி அடங்கிய விசாரணை குழுவை அமைக்க வேண்டும் * கரூர் போலீஸ், உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு மற்றும் தமிழக முதல்வர் அமைத்த ஒரு நபர் ஆணையம் ஆகியவை, இதுவரை விசாரித்த அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் * தமிழக முதல்வர் அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிறுத்தப்படுகிறது * வழக்கு விசாரணையில் சி.பி.ஐ.,க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் * சி.பி.ஐ., விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவிற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் * சி.பி.ஐ., மாநில அரசு மற்றும் மேற்பார்வை குழு ஆகியவற்றுக்கு இடையே முறையான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்ய, தமிழக அரசு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

சி.பி.ஐ., விசாரணையை தி.மு.க., எதிர்ப்பது ஏன்?

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம், சி.பி.ஐ., விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று, முதன் முதலில் கோரிக்கை வைத்ததே தமிழக பா.ஜ., தான். இது, 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.முன்னாள் நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை; சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,க்கு மாற்றியதுடன், விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியையும் நியமித்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது; தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி வெல்லும்.இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியாக இருந்தாலும், அரசியல் கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூரில் பாதிக்கப்பட்ட, 41 குடும்பங்களில் அவர்களுக்கு தெரியாமல், இரு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி, அவர்களையும் வழக்கில் மனுதாரராக சேர்த்துஉள்ளனர்.சம்பந்தப்பட்ட இருவர், தங்களின் கையெழுத்தை பொய் சொல்லி வாங்கி இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, பொய் சொல்லி கையெழுத்து வாங்கியது யார் என்று விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு, சீமான் ஏன் பதற்றப்படுகிறார் என, தெரியவில்லை. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது, குட்கா ஊழல் புகார், துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்த விவகாரம் என, பல சம்பவங்களில், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளார்.ஆளும் கட்சியாக இருக்கும் போது தி.மு.க., ஏன் எதிர்க்கிறது? சி.பி.ஐ.,யை வைத்து அரசியல் செய்வது தி.மு.க., என்பதும், முதல்வர் ஸ்டாலின் என்பதும், தமிழக மக்களுக்கு தெரியும். த.வெ.க., சார்பில், அதன் தலைவர் விஜய், வரும், 17ம் தேதி கரூர் வருவதாக கூறி, நிறைய திருமண மண்டபங்களை கேட்டு அனுமதி கொடுத்துள்ளனர். பா.ஜ.,வினரின் மண்டபத்தையும் கேட்டுள்ளனர். யார் வந்து கேட்டாலும் கொடுக்கலாம் என்று கூறியுள்ளோம். இதுதான் பா.ஜ., நிலைப்பாடு. விஜய் செல்லலாம்; மக்களை சந்திக்கலாம். விஜய் வரும் போது கூட்டம் சேரும் என்றால், பாதுகாப்பு கொடுப்பது காவல் துறை கடமை. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், சென்னையில் பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''சி.பி.ஐ., விசாரணை, மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. போலீஸ் விசாரணையில் என்ன குறை உள்ளது.சி.பி.ஐ., விசாரணை என்றால், தமிழக காவல்துறை தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா. சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு இரண்டு அல்லது மூன்று மூளையா உள்ளது' என, தெரிவித்தார்.

நீதி வெல்லும்: விஜய்

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, சென்னை திரும்பிய த.வெ.க., தலைவர் விஜய் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு, விஜய்க்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்கும் வகையில், தன் சமூக வலைதள பக்கத்தில், 'நீதி வெல்லும்' என விஜய் கருத்து தெரிவித்துள்ளார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krishna
அக் 14, 2025 06:21

Why Not Sack& Punish RulingAllianceParty & their Biased Police& HC Judge Gravely Misusing Powers Against People?


Mani . V
அக் 14, 2025 05:32

இதுக்காக அப்பா, துணை அப்பா இளவரசர், ஐந்து கட்சி அமாவாசை, ஆஸ்கர் நாயகன் மகேஷ் யாரும் கலங்கவேண்டாம். அடுத்த இடத்தில் டேக் டைவேர்ஷன் ஆபரேஷனை பிசிறு இல்லாமல் முடித்தால் "முடிந்தது". எதிரியை தலையெடுக்க விடாமல் செய்து விடலாம். அப்புறம் குட்டி இளவரசர் முதல்வர் ஆகும் வரையிலும் எதிரி இருக்க வாய்ப்பேயில்லை.


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2025 05:08

இவ்வளவையும் சொன்ன உச்சநீதிமன்றம் செந்தில் குமாரை கண்டிக்க கூட இல்லை என்பது வருந்த தக்கது


Kasimani Baskaran
அக் 14, 2025 03:47

எசமானர்களையே போட்டுக்கொடுத்த அந்த இரண்டு ஆஸ்கர் நாயகர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு சந்தேகம் வந்திருக்காது. சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று வழக்குப்போட்டவனையே மிரட்டுமளவுக்கு ஆட்சி கேவலப்பட்டுப்போய் இருக்கிறது.


Palanisamy Sekar
அக் 14, 2025 03:32

விஜய் இதிலிருந்து ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும தனித்து நிற்பது பெரிதல்ல ஆனால் எதிரில் நிற்க்கின்ற கும்பல்கள் கடைந்தெடுத்த ஊழல் பெருச்சாளிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு பொதுவான எதிரி திமுக எனபதை உஙர்ந்துகொண்டு அதனை வீழ்த்த பலம்வாய்ந்த கட்சிகளுடுன் கூட்டணி சேரவேண்டும். இதுதான் நடைமுறை சாத்தியமாக இருக்கும். இல்லையேல் செந்தில் பாலாஜி போன்ற கொடூரங்களுக்கு நமது அப்பாவி பொதுமக்கள்தான் பலிகடா ஆக்கநேரிடும். கருணாநிதி காலத்தில் தலீவரை கைது செய்துவிட்டார்கள் என்று புரளியை கிளப்பிவிட்டு சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் பிகிச்சைக்காரர் எவர் மீதாவது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தலீவருக்காக தீக்குளித்தார் என்றுசொல்லி அவர்கள் கட்சி சார்பு பத்திரிக்கையில் விளம்பரப்படுத்த தலீவரும் அவரது மரணத்தை கண்ணீரோடு கவிதை எழுதி ஒரு லட்ச ரூபாய் வாரி வழங்குவார். அந்த பணத்தையும் அந்த பகுதி திமுக அல்லக்கை வாரிசு என்று சொல்லி அமுக்கிக்கொள்ளும். இது தலீவருக்கும் தெரியும், இருந்தாலும் தன்மீது கைய வெச்சா தொண்டர்கள் உயிரை மாய்க்கவும் தயங்கமாட்டார்கள் என்று ஆளும் தரப்புக்கு சமிக்சை கொடுப்பார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. இதைத்தான் கரூர் தாதா செய்துகாட்டினார். ஆனால் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு மரணம் 41 பேர்வரை சேர்த்தது. நான் கோடு போடச்சொன்னால் அவர் ரோடே போட்டுவிடுவார் என்று பாராட்டினால் அந்த கரூர் தாதா வுக்கு தலீவர் எதிர்பார்ப்பதை காட்டிலும் இன்னும் சிறப்பாக செய்திவிடனும் என்கிற நோக்கத்தில் இதனை செய்தார். அம்மா ஜெ அவர்கள் மதுரைக்கு சென்றபோது பொதுக்கூட்டத்தில் பாம்பை விட்டார்கள், மண்ணள்ளி அந்த கூட்டத்தின் மீது போட்டு குழப்பத்தை உருவாகினாரக்ள். இதனை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் திராவிட மாடலின் திமிர்த்தனம். திமுகவில் உள்ள சீனியர் தலைவர்களுக்கு கூட இதில் ஒப்புதல் இல்லை. எதற்க்காக சர்வாதிகாரி கரூர் தாதாவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்கிற கோபம் இருக்கத்தான் செய்கின்றது. எப்படியாயினும் சி பி ஐ விசாரணையில் எல்லாம் தெரியவரும்போது நாடே அதிர்ந்துபோகும். அதன் அறிக்கையானது வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு மரண அடி நிச்சயமாக இருக்கும். திமுகவின் வரலாறு அசிங்கப்பட்டு அடக்கம் செய்யப்படும். இனி திமுக ஒருக்காலும் எழாது . கிடுக்கிப்பிடியில் திமுக வசமாக சிக்கியது என்றுதான் சொல்லலாம்.


Ramanujam Veraswamy
அக் 14, 2025 02:16

SC has rightly criticized the interference of MadrasvHC ehrn the Karur matter falls under the jurisdiction of Madurai Bench of Madrss High Court. Political pressure exerted on Madras HC in the matter needs tobe investigated and related culprits either political or official are to be brought to book, irrespective of their positions.


Ramesh Sargam
அக் 14, 2025 01:51

இந்த கரூர் விவகாரத்தில் தீர்ப்பு வரும்வரையில் விஜய் மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட வாய்ப்பிருக்கிறதா? அதற்கு அனுமதி கிடைக்குமா?


புதிய வீடியோ