ஆயுதங்கள் பதுக்கிய பயங்கரவாதிக்கு டிசம்பர் 9 வரை என்.ஐ.ஏ., காவல்
பெங்களூரு: பெங்களூரில் பயங்கரவாதம் நிகழ்த்த, ஆயுதங்களை பதுக்கிய பயங்கரவாதியை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு குழுவினர் கஸ்டடியில் எடுத்து, விசாரிக்கின்றனர்.பெங்களூரின், நாகேனஹள்ளி தேவாலயம் அருகில் வசித்த சல்மான் கான், 35, போக்சோ வழக்கில் கைதாகி, தண்டனைக்கு ஆளானார். 2018 முதல் 2022 வரை, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்தார். சிறையில் சல்மானுக்கு, பயங்கரவாதி நாசிர் அறிமுகம் ஏற்பட்டது.சல்மான் உட்பட, சில கைதிகளை நாசிர் மூளை சலவை செய்து, லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக்கினார். தண்டனை முடிந்து வெளியே வந்த சல்மான், பெங்களூரில் பயங்கரவாதம் நிகழ்த்தும் நோக்கில், ஆயுதங்கள், வெடி மருந்துகள் பதுக்கி வைத்து, சப்ளை செய்து வந்தார்.இது தொடர்பாக, கடந்த 2023 ஜூலையில், பெங்களூரின் ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. அதன்பின் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவானதும், வெளிநாட்டுக்கு தப்பியோடிய சல்மானை கண்டுபிடிக்க, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிடும்படி, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சி.பி.ஐ.,யிடம் கோரினர்.அதன்படி ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடும்படி, நடப்பாண்டு ஆகஸ்டில் சி.பி.ஐ., அதிகாரிகள், இன்டர்போலுக்கு சிபாரிசு செய்தனர். ஆப்ரிக்காவின், ருவான்டா நாட்டில் இருந்த சல்மானை, இன்டர் போல் அதிகாரிகளின் உதவியுடன், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நவம்பர் 27ம் தேதி கைது செய்தனர். மறுநாள் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.அவரை, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், அவரை, டிசம்பர் 9 வரை, கஸ்டடியில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.