உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழாம் கட்ட தேர்தல் நிறைவு!

ஏழாம் கட்ட தேர்தல் நிறைவு!

புதுடில்லி,: மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான அனைத்து கட்ட தேர்தல்களும் நேற்றுடன் நிறைவடைந்தன. கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து, நாளை மறுநாள் காலை 8:00 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.நாட்டின் 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்தது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதன்படி, ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102, ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88, மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 92 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.தொடர்ந்து, மே 13ல் நடந்த நான்காம் கட்ட தேர்தலில், 96, மே 20ல் நடந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 49, மே 25ல் நடந்த ஆறாம் கட்ட தேர்தலில் 58 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. கடைசி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 57 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. பீஹாரில் எட்டு; ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு; ஜார்க்கண்டில் மூன்று; ஒடிசாவில் ஆறு; பஞ்சாபில் 13; உத்தர பிரதேசத்தில் 13; மேற்கு வங்கத்தில் ஒன்பது மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரேயொரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 904 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.மேலும், ஒடிசாவில் 147 சட்டசபை தொகுதிகளில், முதல் மூன்று கட்டங்களில், 105 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று நடந்த கடைசி மற்றும் நான்காம் கட்ட தேர்தலில், 42 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும், உ.பி.,யின் வாரணாசி தொகுதிக்கும் நேற்று தான் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி, 58.34 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக ஜார்க்கண்டில் 67.95 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக உ.பி.,யில், 54 சதவீத ஓட்டுகளும் பதிவாகின. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்., - பா.ஜ., இடையே மோதல் ஏற்பட்டது. திரிணமுல் காங்., தொண்டர்கள் வாக்காளர்களை ஓட்டளிக்க விடாமல் தடுத்ததாக, பா.ஜ., வேட்பாளர் ரேகா பத்ரா குற்றம் சாட்டினார். திரிணமுல் காங்., - பா.ஜ., தொண்டர்கள் பசந்தி விரைவு நெடுஞ்சாலையில் மோதிக் கொண்டதால், போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். ஜாதவ்பூர் மற்றும் டைமண்டு ஹார்பர் தொகுதிகளின் சில பகுதிகளிலும் இரு கட்சிகளின் தொண்டர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில், ஏழு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலில், அனைத்து கட்டங்களிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஒடிசா, உ.பி., ஜார்க்கண்ட் உட்பட தேர்தல் நடந்த மாநிலங்களின் ஒருசில இடங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அனைத்து கட்ட தேர்தல்களும் முடிந்து விட்ட நிலையில், 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அருணாச்சல், சிக்கிமில்

இன்று சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைமுதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் அருணாச்சலில், 60 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்., 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட 10 பேர், போட்டியின்றி தேர்வானதால், 50 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு பதிவானது. இதே போல், 32 சட்டசபை தொகுதிகள் உள்ள சிக்கிமிலும், ஏப்., 19ல் தேர்தல் நடந்தது. இந்த இரு மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு நடந்த லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுநாள் நடக்கவுள்ளது. ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் அறிவிக்கப்பட உள்ளன.

குளத்தில் வீசப்பட்ட ஓட்டு இயந்திரம்

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியின் பங்கரில் உள்ள சதுலியா பகுதியில், இந்திய மதச்சார்பற்ற முன்னணி மற்றும் மார்க்.கம்யூ., ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, ஓட்டுச்சாவடிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி, அருகிலுள்ள குளத்தில் வீசியது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ