வழக்கில் சிக்கிய போதை பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட்
புதுடில்லி:டில்லியில், கொலை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மறைத்த மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார்.கடந்த 10ம் தேதி அதிகாலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ், 26, என்பவரை கத்தியால் குத்தி கொன்றதாக, அவரின் நண்பரான மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லால்ஹிரியாத்புயா, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த படுகொலை தொடர்பாக கைதானவரின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அடைவது தொடர்பாக நடந்த மோதலில், பிரகாஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட, 2 கிராம் போதைப்பொருளை, கிஷான்கார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., வழக்கில் சேர்க்கவில்லை; கணக்கும் காண்பிக்கவில்லை. இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், எஸ்.ஐ.,க்கு மூன்று போலீசாரும் உதவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீஸ் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள அந்த போலீஸ் எஸ்.ஐ., சில மாதங்களுக்கு முன், தன் உறவினரின் திருமணத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில், போலீஸ் சீருடையுடன் நடனமாடினார். அந்த வழக்கில் இருந்து பின் தப்பிய அவர், இப்போது போதைப்பொருளை மறைத்த குற்றத்திற்காக நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.