உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் டிராக்டர் பேரணி 6வது நாளாக விவசாயிகள் போராட்டம்

ஹரியானாவில் டிராக்டர் பேரணி 6வது நாளாக விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்,ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, டிராக்டர் பேரணியில் விவசாயிகள் ஈடுபட்ட நிலையில், பஞ்சாபில், பா.ஜ., தலைவர்களின் வீடுகளுக்கு வெளியே தர்ணா போராட்டத்தை நடத்தினர்.விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளதால், ஹரியானா உடனான பஞ்சாபின் எல்லைகளான ஷம்பு மற்றும் காநவுரி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் பாரதிய கிசான் சாருணி என்ற விவசாய சங்கம் சார்பில், நேற்று டிராக்டர் பேரணி நடந்தது.குருஷேத்ரா, யமுனா நகர், சிர்சா உள்ளிட்ட இடங்களில் நடந்த பேரணிகளில், 150க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பங்கேற்றனர்.இதே போல், பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அபோஹரில் உள்ள பா.ஜ., மாநில தலைவர் சுனில் ஜாகர், பர்னாலாவில் உள்ள கட்சி மூத்த தலைவர் கேவல் சிங் தில்லான் ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே, பாரதிய கிசான் ஏக்தா உக்ரஹான் என்ற விவசாய சங்கம் சார்பில் தர்ணா நடந்தது. மேலும், மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள, 21 சுங்கச்சாவடிகளிலும் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, விவசாய சங்கப் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர்கள் இன்று நான்காவது கட்டமாக சந்தித்து பேச உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை