உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி! முதல் முறையாக எம்.பி.,யாகிறார் பிரியங்கா: 4.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் சாதனை

வெற்றி! முதல் முறையாக எம்.பி.,யாகிறார் பிரியங்கா: 4.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் சாதனை

வயநாடு: காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, முதல் முறையாக எம்.பி.,யாக உள்ளார். வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தன் அண்ணன் ராகுலை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த ஏப்.,ல் நடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வென்ற அவர், வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், அவரது சகோதரி பிரியங்கா போட்டியிட்டார்.

பெரும் கூட்டம்

வயநாடு முழுதும் சுற்றிச் சுழன்று, பிரியங்கா பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்துக்கு பெரும் கூட்டம் கூடியது. ராகுலும், பிரியங்காவுக்காக பிரசாரம் செய்தார். நாடு முழுதும் இருந்து வந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பிரியங்காவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பிரியங்காவுக்கு, 6,22,338 ஓட்டுகள் கிடைத்தன.தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் முக்கேரியை விட, 4,10,932 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வென்றார்.சத்யன் முக்கேரி, 2,11,407 ஓட்டுகள் பெற்றார். பா.ஜ.,வின் நவ்யா ஹரிதாஸ், 1,09,939 ஓட்டு களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் ராகுல், 6,47,445 ஓட்டுகள் பெற்றார். அதனுடன் ஒப்பிடுகையில், பிரியங்காவுக்கு குறைந்த ஓட்டுகளே கிடைத்தன.ஆனால், ராகுல், 3,64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அதன்படி பார்க்கையில், பிரியங்கா அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்று உள்ளார்.

65 சதவீத ஓட்டுப்பதிவு

மொத்தம், 14 லட்சம் வாக்காளர்கள் உள்ள வயநாட்டில், ஏப்., மாதம் நடந்த தேர்தலில், 74 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால், தற்போது, 65 சதவீத ஓட்டுப் பதிவே நடந்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராகுல், 7,06,367 ஓட்டுகள் பெற்று, 4,31,770 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.முதல் முறையாக தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள பிரியங்கா, அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.உங்களுடைய குரலாக இருப்பேன்!வயநாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளின் அன்பு மற்றும் நம்பிக்கை பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்து வரும் நாட்களில், 'நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், நம் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறார்; நம் தேர்வு சரிதான்' என்று, நீங்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் செயல்படுவேன். பார்லிமென்டில் உங்களுடைய குரலாக இருப்பேன்.பிரியங்கா,பொதுச்செயலர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை