திருவனந்தபுரம்:கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 206 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், தேடுதல் வேட்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுவரை, 215 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 206 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை ஐந்தாவது நாளாக நேற்றும் நடந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்பட, பல அமைப்புகள் இதில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது:சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 87 பெண்கள், 30 குழந்தைகள், 98 ஆண்கள் என, 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், 148 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதுவரை, 67 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. அந்தந்த பஞ்சாயத்துகள் வாயிலாக, இறுதிச் சடங்குகள் செய்ய முடிவு செய்துள்ளோம்.காயமடைந்த 81 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், 206 பேரைக் காணவில்லை. அவர்களுடைய நிலை என்னவாயிற்று என்பது தெரியவில்லை. மீட்புப் பணியில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் உள்பட பல அதி நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து, ஐந்து நாட்கள் மீட்புப் பணி நடந்துள்ளது.இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது.இந்த இயற்கை பேரழிவு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலியாறு நதியில் சிலருடைய உடல்களும், சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவை யாருடையது என்பது அடையாளம் காண்பது பெரும் சிரமமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
உருவாகிறது தனி டவுன்ஷிப்!
முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியுள்ளதாவது:முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பு மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் பலர் நன்கொடை அளித்து வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாதுகாப்பான இடத்தில் தனி டவுன்ஷிப் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலம் மற்றும் நன்கொடைகளை பலர் அளித்து வருகின்றனர். இதை, கூடுதல் நில வருவாய் கமிஷனரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஏ. கீதா ஒருங்கிணைத்து வருகிறார். உதவி செய்வதற்காக, kerala.gov.inஎன்ற இமெயில் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.வயநாடு லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல், 100 பேருக்கு வீடுகள் கட்டுத் தருவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.சதீஷன், தனிப்பட்ட முறையில், 25 பேருக்கு வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார்.காங்.,கைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 100 வீடுகள் கட்டித் தருவதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
ஹாம் ரேடியோ!
'ஹாம் ரேடியோ' எனப்படும் அமெச்சூர் ரேடியோ சேவை முறை, மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க பெரிய அளவில் உதவியுள்ளது. ஹாம் ரேடியோ என்பது, கம்பியில்லா, இன்டர்நெட் வசதி தேவைப்படாத, ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாற்றும் முறை. இதைப் பயன்படுத்த முறையான பயிற்சி, லைசென்ஸ் பெற வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தி, உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும் தொடர்பு கொள்ள முடியும். அலைவரிசையின் அடிப்படையில், தகவல்கள் குறியீடாகப் பெறப்படும். வயநாடு பகுதியில், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாம் ரேடியோ, மீட்புப் படையினருக்கும், அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்கு பெரிய அளவில் உதவியுள்ளது. இதற்காக, கல்பேட்டாவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஹாம் ரேடியோ தன்னார்வலர்கள், தகவல் பரிமாற்றத்துக்கு உதவி வருவதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.