உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயேந்திராவை முதல்வராக்க எடியூரப்பா... முயற்சி! சித்தராமையா திடுக் குற்றச்சாட்டால் பரபரப்பு

விஜயேந்திராவை முதல்வராக்க எடியூரப்பா... முயற்சி! சித்தராமையா திடுக் குற்றச்சாட்டால் பரபரப்பு

பெங்களூரு : ''தன் மகன் விஜயேந்திராவை முதல்வராக்க, முன்னாள் முதல்வர் எடியூரப்பா முயற்சிக்கிறார்,'' என, முதல்வர் சித்தராமையா திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. தற்போது லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. இம்முறை 20 தொகுதிகளை கைப்பற்ற, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.சமீப நாட்களாக காங்கிரசில் முதல்வர் பதவி குறித்து, சர்ச்சை நடக்கிறது. 'லோக்சபா தேர்தலுக்கு பின், சித்தராமையா முதல்வர் பதவியை இழப்பார். சிவகுமார் முதல்வராவார்' என, தலைவர்கள் கருத்து தெரிவித்து, மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், பெங்களூரில், முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:கடந்த முறை 25 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு, இம்முறை தோல்வி பயம் வாட்டி வதைக்கிறது. இதே காரணத்தால் பல தொகுதிகளில், இன்னாள் எம்.பி.,க்களுக்கு சீட் கொடுக்காமல், வேட்பாளர்களை மாற்றியது.நாடு முழுதும் மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எங்களின் ஐந்து வாக்குறுதி திட்டங்களின் அலை ஜோராக உள்ளது. மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்பதை உணர்ந்துள்ளனர். எங்கள் கட்சி எப்போதும் பொய் சொல்லாது.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, தன் மகன் விஜயேந்திராவை முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இதை பா.ஜ.,வில் யாரும் ஏற்க மாட்டார்கள். யார், யார் விஜயேந்திராவை எதிர்த்தார்களோ, அவர்களுக்கு சீட் கிடைக்காமல் செய்துள்ளார். பா.ஜ.,வில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ஒன்று எடியூரப்பா கோஷ்டி. மற்றொன்று சந்தோஷ் கோஷ்டி.வரும் நாட்களில் விஜயேந்திராவை முதல்வராக்க, எடியூரப்பா பாதை வகுக்கிறார். தேர்தல் முடிந்த பின், வாக்குறுதி திட்டங்கள் நீடிக்காது என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வந்தால், வாக்குறுதி திட்டங்கள் தொடராது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.,வினரால் வாக்குறுதி திட்டங்களை தொட முடியாது. இதற்கு மாநில மக்களும், காங்கிரஸ் அரசும் வாய்ப்பளிக்காது.லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை உணர்ந்து, விரக்தியடைந்த குமாரசாமி கிராமங்களின் பெண்களை பற்றி, அவமதிப்பாக பேசியுள்ளார்.ஷிவமொகா லோக்சபா தொகுதியில், இம்முறை எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா வெற்றி பெற மாட்டார். காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார் வெற்றி பெறுவார்.இவ்வாறு அவர் கூறினார்.'ஒருவேளை மாநிலத்தில், பா.ஜ., அதிக தொகுதிகளை கைப்பற்றினால், எடியூரப்பா கை ஓங்கும். மீண்டும், 'ஆப்பரேஷன் தாமரை' நடத்தி எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிக்கலாம். அரசை கவிழ்த்து பா.ஜ., அரசு அமைந்தால், எடியூரப்பா கட்சி மேலிடத்துக்கு, நெருக்கடி கொடுத்து விஜயேந்திராவை முதல்வர் பதவியில் அமர்த்தினாலும் ஆச்சரியப்பட முடியாது.'இந்த பயத்தின் வெளிப்பாடு தான், முதல்வர் சித்தராமையாவின் குற்றச்சாட்டில் தெரிகிறது' என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ