உள்ளூர் செய்திகள்

மகிழ்வோடு இருங்கள்!

‘’மகிழ்ச்சி பொங்குகிற முகத்துடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்தால், உடனே அந்த வீட்டில் புதிய ஒளி தோன்றுகிறது.” -ஸ்டீவன்ஸன் எப்பொழுதும் மகிழ்வோடு, சிரித்த முகத்தோடு இருங்கள். அது உங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவும். மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்பட்ட நோக்கமே மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான். வாழ்க்கையின் வெற்றியும் அதிலேதான் இருக்கிறது. ஆனால், அதை நாம் உணருவதில்லை! ஒரு சின்ன விஷயத்திற்கு கூட, முகத்தை ‘உம்’ என்று, வைத்துக் கொண்டு, அதையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம். அடுத்து வரக்கூடிய பெரிய வெற்றியைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. கவலைப்பட்டு நாம் முகத்தை கடினமாக வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய முகப்பொழிவும், நம்முடைய உடல் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது. எனவே, கவலைகளை தூக்கி எரிந்து விட்டு மகிழ்ச்சியாக, சிரித்த முகத்தோடு இருக்கப் பழகுங்கள். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பிறர் நம்மை நேசிக்கக்கூடிய சூழலும் உருவாகும். ஒரு பழமொழிகூட உண்டு; ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’. இது பழமொழி மட்டுமல்ல; வெற்றிக்கான மந்திரமும் தான். மனம் விட்டு பேசுவது எப்படியோ, அதேப்போன்று மனம் விட்டு சிரிப்பதன் மூலம் உடலில் உள்ள நோய்களும, மனதில் உள்ள பாரங்களும் இறங்கி, நாம் இயல்பான நிலைக்கு வருகிறோம். இதனால், நமது வாழ்க்கை இலகுவாக மாறுகிறது. எங்களுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர், அலுவலகத்தில் எப்பொழுதும் சிரித்த முகத்துடன், நகைச்சுவை உணர்வுடன், சுறு சுறுப்பாகவும், இளமையாகவும் வளம் வருவார். எதைப் பற்றியுமே கவலைப்பட மாட்டார். அவருக்கும் அலுவலகத்தில் வேலைப்பளு உண்டு; நெருக்குதல் உண்டு. ஆனாலும், அதையெல்லாம் ஈஸியாக சமாளித்து கஷ்டத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைத்து விடும் அளவுக்கு திறன் பெற்றவர். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும். ஒரு நாள் அவரிடம் இது தொடர்பாக கேட்டபோது, அவர் சொன்னார்; ‘இந்த உலகத்தில் நாம் வாழ்வதே சந்தோஷமாக இருக்கத்தான். இறைவனும் அதையே விரும்புகிறான். ஆனால், நாம்தான் வாழ்க்கையை கஷ்டமாக்கிக் கொண்டு, மகிழ்ச்சியின்றி இருக்கிறோம். கவலையிடம் நாம் தோல்வியடைவதை விட, கவலையை நாம் தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்கு, சிறந்த மருந்து தான் மகிழ்வோடு, சிரித்த முகத்தோடு, நகைச்சுவை பண்போடு இருத்தல்,’ என்றார். நம்முடைய எண்ணங்கள் அழகாக இருப்பின், செயல்கள் அழகாக மாறும். செயல்கள் அழகாக மாறும்போது, நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி ஏற்படும்போது எல்லாமே அழகாக மாறும். எல்லாமே அழகாக மாறும்போது, நம் வாழ்வு நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாய் மாறும்! -நெல்லை சலீம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !