லாப நோக்குடனேயே தொலைநிலைக் கல்வி - திருந்துமா கல்வி நிறுவனங்கள்?
ஒரு கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று படிக்கவியலாத, பல்வேறான வாழ்க்கைச் சூழல்களில் சிக்கித் தவித்து, அதேசமயம் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்டதுதான் தொலைநிலைக் கல்வி திட்டம். பள்ளிக் கல்வியை நிறைவுசெய்த மாணவர்கள் முதற்கொண்டு, இளநிலைப் படிப்பை முடித்தவர்கள், தங்களது பணியில் பதவி உயர்வையோ அல்லது சம்பள உயர்வையோ எதிர்பார்ப்பவர்கள் வரை, பலதரப்பாரும் தொலைநிலைக் கல்வியை நாடி வருகின்றார்கள்.கலை, அறிவியல், மேலாண்மை போன்ற பல்வேறு பிரிவுகளில், பட்டப் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் வரை வழங்கப்படுகின்றன. ஏராளமான பல்கலைக்கழகங்கள், தொலைநிலை முறையிலான படிப்புகளை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றன. தொலைநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. ஆனால், தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், தங்களின் சேவையை முறைப்படி செய்கின்றனவா? என்பதுதான் கேள்வியே. தொலைநிலைக் கல்வியின் மூலம், ஒரு கல்வி நிறுவனத்திற்கு அபரிமிதமான வருவாய் கிடைக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தொலைநிலைக் கல்வியை மேற்கொள்வோரில், ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர், தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவோர்களாய் இருக்கின்றனர். இதன்மூலம், அந்த மாணவர்களுக்கு நட்டம் என்றாலும், குறிப்பிட்ட பல்கலைக்கோ கொள்ளை லாபம். சிலர், ஏதேனும் ஒரு படிப்பில், முதலாமாண்டு கட்டணம் செலுத்தி, புத்தகம் வாங்கியதோடு சரி, அதன்பிறகு, வேறுவேறு காரணங்களால், தங்களின் திட்டத்தை மாற்றி விடுகின்றனர். வேறு சிலரோ, முதலாமாண்டு தேர்வில், சில பாடங்களில் தோல்வியடைந்துவிட்டால், அதன்பிறகு, தங்களின் படிப்பை கைவிட்டு விடுகின்றனர். ஒரு மாணவர், தேர்வில் தோல்வியடைந்து அரியர் எழுதினாலோ அல்லது மறுகூட்டலுக்கோ அல்லது Improvement தேர்வுக்கோ விண்ணப்பித்தால், அதற்கு கணிசமான அளவில், தனி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரையில், எப்படி பார்த்தாலும், அப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. தொலைநிலைக் கல்விப் பட்டமானது, அரசைப் பொறுத்தவரை, நேரடி முறையில் படித்துப் பெறுகின்ற பட்டத்திற்கு நிகரானதே. மேலும், தனியார் துறை வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் கூட (ஆசிரியர் பணியைத் தவிர), தொலைநிலைக் கல்வியின் மூலம் பெற்ற பட்டத்திற்கு, சம அந்தஸ்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கே நாம் கேட்க வருவது என்னவெனில், இந்தளவிற்கு லாபத்துடனும், லாப நோக்குடனும், தொலைநிலைக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள், அதை தரமாகவும் அல்லது முறைப்படியாகவும் வழங்குகின்றனவா? என்பதுதான். தொலைநிலைக் கல்வியில், பொதுவாக, செமஸ்டர் முறை இருப்பதில்லை. ஒரு ஆண்டிற்கு ஒரு தேர்வுதான். ஆனால். அந்த தேர்வு, இதர கல்லூரிகளில் நடத்தப்படும் காலகட்டத்தில் நடத்தப்படுவதில்லை. ஏறக்குறைய, 2 மாதகால அளவிற்கு, தாமதமாகவே நடத்தப்படுகிறது. முடிவுகளும், தாமதமாகவே வெளிவருகின்றன. இதனால், ரெகுலர் கல்லூரிகளில் படித்து முடித்து, ரிசல்ட் வெளிவந்து, வேறு மேற்படிப்புகளுக்கு செல்லும் மாணவர்களோடு, தொலைநிலையில் படிக்கும் மாணவர்களால் இணைய முடிவதில்லை. இவர்கள், குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுவொரு பிரச்சினையென்றால், இதைவிட பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அதாவது, தொலைநிலை கல்விமுறையில் பயிலும் மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை, கல்லூரி அல்லது பல்கலைகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெரும்பாலும் திருத்துவதில்லை(evaluation). ஆனால், ரெகுலர் முறையில் படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்கள், பணிபுரியும் பேராசிரியர்களாலேயே திருத்தப்படுகின்றன என்பது சிறப்பு. ரெகுலர் பேராசிரியர் திருத்தும்போது, ஒரு மாணவர், தேர்வில் தோல்வியடைவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு பேராசரியர், எந்த ஒரு மாணவனையும், எளிதில் பெயில் செய்ய விரும்புவதில்லலை என்பது ஒரு உளவியல் காரணமும் கூட. மேலும், ஒரு பேராசிரியர் நல்ல அனுபவம் பெற்றவர் என்பதால், ஒரு கேள்விக்கு, (நேரடியாக சரியான முறையில் பதிலளிக்காவிட்டாலும் கூட) எந்த விதத்தில் அல்லது எந்த பரிணாமத்தில் விடையளிக்கப்பட்டுள்ளது என்பதை கணித்து, ஓரளவு மதிப்பெண் வழங்கி விடுவார். இதனால், ரெகுலர் முறையில் படிப்பவர்களுக்கு, மதிப்பெண்களும் கூடுதலாக கிடைக்கிறது. ஆனால், தொலைநிலைக் கல்வி முறையிலோ, நிலைமையே வேறு. அங்கே விடைத்தாள் திருத்துவதற்கு, ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பேராசிரியர் பணியில் இல்லாதவர்கள், வேலையில்லா பட்டதாரிகள், ஏதேனும் தனியார் கல்லூரிகளில் புதிதாக பணிக்கு சேர்ந்த அனுபவமற்றவர்கள் போன்றோர்தான் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு, பாடத்தைப் பற்றியும், இதர பிற விஷயங்களைப் பற்றியும், அதிக அனுபவமோ, அறிவோ இல்லாத காரணத்தால், ஒரு வினா, எந்த பரிணாமத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை கணிக்க முடிவதில்லை. இதனால், சிறப்பாக எழுதியிருந்தும், மதிப்பெண்கள் குறைந்து விடுகின்றன. மேலும், ஒருவரை தேவையின்றி(பாஸ் ஆகும் அளவிற்கு எழுதியிருந்தாலும் கூட, அதை புரிந்துகொள்ளாமல்) பெயில் ஆக்கினால், அதனால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி புரிந்துகொள்ளும் பக்குவமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இருப்பதில்லை. இத்தகைய காரணங்களால், பலரின் பணம் மற்றும் நேரம் ஆகியவை வீணாவதோடு, தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி, தங்களின் படிப்பையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம், தொலைநிலைக் கல்வியை வழங்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. தங்களுக்கு, நல்ல வருமானம் வந்தால் போதும் என்றே நினைக்கின்றனர். தற்போதைக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில், தேர்ச்சிபெற்ற மாணவர்களில், ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள்(பல்வேறு சூழல்களின் காரணமாக) ஏதேனும் ஒரு பல்கலையில், தொலைநிலைக் கல்வி முறையில், ஏதேனும் ஒரு இளநிலைப் படிப்பில் இணைவார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு, தொலைநிலைக் கல்விமுறையின் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் முழுமையாக தெரிவதில்லை. இதனால், தொலைநிலை படிப்பில் இணைவோரில் கணிசமான மாணவர்கள், தங்களின் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழல் ஏற்படுகிறது. எனவே, தொலைநிலைப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் நிலையை உணர்ந்து, தேர்வுகளுக்கான காலத்தை, ரெகுலர் கல்லூரிகளுக்கு இணையாக மாற்றியமைக்க வேண்டும் மற்றும் முடிந்தளவிற்கு தகுதியும், அனுபவமும் வாய்ந்த நபர்களை, விடைத்தாள் திருத்துவதற்கு பணியமர்த்த வேண்டும். இதன்மூலமே, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் வாழ்வில், முன்னேற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டுவர முடியும்.