வெற்றிக்கு ஆதாரம் - பொருளாதாரம்!
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பண்டங்களின் திடீர் விலை உயர்வுக்கு யார் காரணம்? படித்த பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எது காரணம்? சிந்தியுங்கள்! விடை கிடைத்ததா? ஆம்! நாம்தான்! நமது நாட்டுப் பொருளாதாரத்தைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நம்மிடையே விழிப்புணர்வு இல்லாமைதான். பொருளாதாரம் என்பது என்ன? பொருளுக்கு ஆதாரம் (பொருள் + ஆதாரம்). மனிதனின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் அற்புத சக்தி பொருளியல். ‘அருளில்லாருக்கு அவ்வுலகமில்லைபொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை!‘ இத்தகையப் பெருமைவாய்ந்த பொருளாதாரத்தைப் பற்றி அறிவதற்கான நேரத்தையும், முயற்சியையும் நாம் எடுப்பதற்கு முற்படுவதில்லை. நம் அன்றாட வாழ்வின் கண்களாக விளங்கும் நிதி மற்றும் வங்கிகள் போன்ற இன்றியமையாத துறைகளில் நம்மை ஈடுபடச் செய்கிறது பொருளியல். அதைப்பற்றி முழுமையாக அறியும் முன்பாகவே, அது நம்மை ஆட்கொண்டு விடுகிறது. அதுவே நமது வாழ்க்கையின் ‘ஆதார ஸ்ருதி‘ ஆகிவிடுகின்றது. ஆம் ‘காசு...பணம்....துட்டு...money...money‘ இன்றைய வாழ்க்கையின் அடித்தளமாக விளங்கும் வங்கிகள் மற்றும் பங்கு சந்தைகள் பற்றிய முழுமையான, தெளிவான விளக்கங்களை, பொருளியல் நமக்கு அளிக்கின்றது. நமது நாட்டில் அறிவியல் பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பொருளியல் பாடத்திற்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் நமது அறியாமை. வாழ்வின் ஆதாரத்தை அறியாமல் வானில் கோட்டைக் கட்டிக்கொண்டு இருக்கின்றோம். நீங்கள் எந்தத் துறையில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக நிற்பது பொருளியல். நீங்கள் எழுத்தாளராகவோ, டாக்டராகவோ இருக்கலாம். ஆனால், பொருளியல் பற்றி அறியாமல் உங்களது துறையில் சிறக்கவோ, வழிநடத்தவோ இயலாது. ஏனெனில், பொருள்தான் அனைத்திற்கும் ஆதாரம். ‘தேவை - ஆசை - திருப்தி‘ இவைதான் பொருளியலின் முக்கிய கோட்பாடுகள். இதைக்கொண்டு, மனித சக்தி, தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறது. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய வாழ்வில் ஏதோவொரு குறிக்கோளை வைத்துக்கொண்டு, அந்த இலக்கை நோக்கி நடக்கிறான். அந்த வாழ்க்கைப் பயணத்தில் பலதரப்பட்ட ஆசைகளையும், சேவைகளையும் சுமந்து செல்கிறான். அந்த ஆசைகளையும், தேவைகளையும் பூர்த்திசெய்யும்போது, ஏற்படுகின்ற திருப்திதான் அவனது வாழ்வின் மகிழ்ச்சி. இப்போது கூறுங்கள்! உலகத்தை சுழற்றுவிக்கும் ஆதாரம் பொருளாதாரம்! அல்லவா? வாழ்க்கையின் ஆதார ஸ்ருதியான பொருளாதார கல்வி கற்கும் அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள் இளைஞர்களே! - சரஸ்வதி, கல்வியாளர்