‘சிலபஸ்’ மட்டும் போதாது!
சமீபகாலமாக, துள்ளி விளையாட வேண்டிய பள்ளி பருவத்தினர் உட்பட, உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... ஆசிரியர் சிறிது கடிந்து பேசினால்கூட, விபரீத முடிவுக்கு செல்லும் நிலையை பார்க்க முடிகிறது! விளைவு, கல்லூரியிலும் உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் ஏராளமான பிரச்னைகளை திடகாத்திரமாக எதிர்கொள்ள வேண்டிய இளைஞர்கள், இன்று சிறு சிறு ஏமாற்றங்களுக்குக்கூட மனம் உடைந்துபோகும் சூழல் மிக ஆபத்தானது. ஆசிரியர்-பெற்றோர் பங்கு இதனை உணர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம், ஒவ்வொரு கல்லூரியிலும் உளவியல் நிபுணர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. மாணவர்களின் உளவியல் பிரச்னைகள் கண்டறியப்பட்டு, அவற்றில் இருந்து வெளிவர உரிய ‘கவுன்சிலிங்’ தேவைப்படுகிறது. இதில், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான பங்கு அதிகம்! பள்ளி படிப்புவரை தங்களது குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கின்றனர். ஆசிரியர்-பெற்றோர் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்கின்றனர். அதிக மதிப்பெண்களை சுற்றியே அவர்களது எண்ணவோட்டம் உள்ளது. கல்லூரி என்று, மாணவர்கள் சென்ற பிறகு, அவர்களை கவனிக்க பெற்றோர் தவறிவிடுகின்றனர். மாணவர்களின் வளர்ச்சியில், பெற்றோரது பங்கும் மிக முக்கியம். மதிப்பு கூட்டு படிப்புகள் கடின உழைப்பு, தொடர் முயற்சி, தெளிவான எதிர்கால திட்டம் ஆகிய மூன்றும் இருந்தால் நிச்சயம் வெற்றியாளாராக முடியும். மாறாக, பெரும்பாலானோர் குறுகிய திட்டத்தை மட்டுமே நோக்கி பயணிக்கின்றனர். போட்டி அதிகம் மிகுந்த இன்றைய காலகட்டத்தில், தகுந்த வேலை வாய்ப்பைப் பெற, ஒவ்வொருவரும் தன்னை தகுதியுள்ளவராக உயர்த்திக்கொள்ள வேண்டியுள்ளது. வெறும் கல்லூரி பாடத்திட்டத்தை மட்டும் படித்து, தேர்ச்சி பெற்றால் போதாது. மதிப்பு கூட்டு படிப்புகளை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டியது அவசியமாகிறது. ‘பட்டப்படிப்பிற்கு மட்டுமே வேலை’ என்பது எளிதல்ல; கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வதும் முக்கியம். உதாரணமாக, வேலை பெற பி.காம்., பட்டம் மட்டும் பொதாது; ‘டேலி’ படிக்க வேண்டியது கட்டாயம். ஆய்வின் அவசியம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. அரசாங்கமும், பல்வேறு அமைப்புகளும் ஆராய்ச்சிக்காக ஏராளமான நிதி ஒதுக்கிவைத்து உள்ளன. கல்வி நிறுவனங்கள் அவற்றை பயன்படுத்தி, முறையாக ஆய்வில் ஈடுபட வேண்டும். தேசம், சமுதாயம் மற்றும் கல்வி நிறுவனத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி ஒருவரது சுய முன்னேற்றத்திற்கும் ஆய்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம். மொபைல், கம்ப்யூட்டர், பேஸ்புக், தொலைக்காட்சி ஆகியவற்றில் உள்ள ஆர்வமும், அர்ப்பணிப்பும் கற்றலிலும், திறன் வளர்ப்பிலும் இருந்தால் நமது இளைஞர்களின் பலத்தைக் கண்டு உலகமே வியக்கும்! -எம்.டி. பாலாஜி, செயலர், ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி.