‘இயல்பு வாழ்க்கை’க்கு திரும்புவோமா?
சமீபத்திய வெள்ளம் நமக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்தாலும், ‘மறப்பதுவே மனித கடமை’ என்ற எண்ணம் தான் நம்மிடையே உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது! ‘சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உருவான வெள்ளத்தின்போது, வீட்டின் மொட்டை மாடிகளில்கூட தஞ்சம் புக முடியாத நிலையில், உணவு, உடை, தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஏரியை அழித்தும், ஆக்கிரமித்தும் வீடுகளும், பல்வேறு கட்டடங்களும் கட்டியதன் விளைவே இது’, என்று மீடியாக்கள் ஓடி ஓடி தகவல்களை அளித்து வந்த அதேநாட்களில், சில பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில், வெள்ள நீர் சூழ்ந்த அதே பகுதிகளில், ‘அனைத்து வசதிகளும் நிறைந்த அழகிய வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் உங்களுக்காக...’ என்று நடிகைகள் செல்லமாக பேசி, சென்னை மக்கள் ஏதோ ஊட்டியின் சீதோஷணத்தையும், கோவாவின் இயற்கை காட்சிகளையும் வீட்டிற்குள் இருந்தே கண்டு களித்து மகிழ்ச்சி பொங்க, பொழுதுபோக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று எண்ணும் வகையில் விளம்பரம் செய்துகொண்டிருந்தனர். இதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை! என்னதான் இன்னல்களை அனுபவத்தாலும் அடுத்த கனமே அதை மறந்து வெற்று பந்தாக்களுக்கும், ஏமாற்று சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் ஒருபுறம் இருக்காத்தானே செய்கின்றனர். இவர்கள் எப்போது தான் திறந்துவார்களோ என்று மனதிற்குள்ளேயே கேள்வி கேட்பதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை! வெள்ளத்தின் சோகம் சற்றும் வடியாத நிலையில், தங்களது தொழிலை திறம்பட செய்யத்தொடங்கிவிட்டனர் ரியல் எஸ்டேட் துறையினர். அவரவர் அவர்களது தொழிலில் கவனத்தை செலுத்துவதுபோல ரியல் எஸ்டேட் துறையினரும் அவர்களது தொழிலில் கண்ணும் கருத்துமாக செயல்படத்துவங்கிவிட்டனர். மக்களை கவர்வதற்கு, புதிய விளம்பம்பர யுக்தியை சமீபத்திய வெள்ளத்தில் இருந்து கற்றுக்கொண்டுவிட்டனர். தங்களது விளம்பரத்தில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் நிலத்தில் இருந்து 3 அடி உயரத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. இதனால், 10 அடி, 15 அடி நீர் வந்தாலும் உங்களது வீட்டிற்குள் வெள்ளம் போகாது! என்கின்றனர். இதையும் மக்கள் நம்பத்தானே செய்வர்; எங்கே நமக்கு இந்த வீடு கிடைக்காமல் போய்விடுமோ என்று இல்லாத போட்டியை உருவாக்கி, அடித்து பிடித்து கடனை வாங்கி அந்த வீட்டை வாங்கத்தானே செய்வர். இதில் ஏதாவது மாற்றம் ஏற்படப் போகிறதா என்ன? மறுபுறம் ஆக்கிரமிப்புகளை அதிதீவிரமாக அகற்றி வருகிறேம் என மார்தட்டிக்கொள்கிறது அரசாங்கம். கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதைப்போல் பாவலாசெய்து பழகிப்போன அரசாங்கத்திற்கும், அதையே பார்த்து பார்த்து சகித்துப்போன பொதுமக்களுக்கும் இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது? எந்த இடமாக இருந்தாலும், வீடு கட்டுவதற்கான உரிமங்களை கண்களை மூடிக்கொண்டு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறதே... அவ்வாறான அரசின் அனுமதியுடன் தானே ரியல் எஸ்டேட் துறையினரும் விதிமுறைப்படி பதிவு செய்து, கட்டடங்களுக்கான உரிமம் பெற்று, அனைத்து சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு தங்களது ‘புராஜெக்ட்’களை அறிவிக்கின்றனர்! இதனால், அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்று மற்றும் பார்த்தால் போதும், நாம் எதற்கு மெனக்கெட்டு சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை ஆராய வேண்டும். ஏரி, ஆறுகள் இருந்தாலென்ன... அவற்றை காப்பது அரசின் கடமை தானே? இதில் பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்யமுடியும்? பழையபடி, ஏரி, ஆறுகள் இருந்த பகுதியில் வீடுகளை வாங்கிப்போடுவோம்... ‘இயல்பு’ வாழ்க்கைக்கு திரும்புவோம். குளம், ஏரி, குட்டை, கன்மாய், கால்வாய், ஆறு என நீருக்கான எத்தனை ஆதாரங்களும், வடிகால்களும் அழிந்தாலென்ன, நமக்கு நமது தலைமுறையினருக்கு முடிந்தவரை சொத்துக்கள் சேர்ப்பது தானே முக்கியம்... குளம், ஏரிகளெல்லாம் நமது சொத்துக்கள் அல்லவே! அவையெல்லாம் அரசின் சொத்துக்கள் தானே? அவற்றால் நமக்கும், நமது தலைமுறையினருக்கும் என்ன பயன்? ஆதலால், நாம் மீண்டும் ‘இயல்பு வாழ்க்கை’க்கு திரும்புவோம்! யாரும் எதிர்பாராத சுனாமியை கண்டு 10 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அந்த நிகழ்வுகளை மறந்துவிட்டோம். சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இப்படியொரு வெள்ளம் வரும் என்று யாரும் கற்பனைகூட செய்யவில்லை. அதனையும் வீரத்துடன் எதிர்கொண்டு விட்டோம். பிறகென்ன அதையும் மறந்துவிடுவோம்! அடுத்ததாக இதுவரை யாரும் எண்ணிராத பூகம்பம் என்றொரு மகா இயற்கை பேரிடர் மட்டும் வந்துவிடவா போகிறது? அப்படியே வந்தாலும் அதையும் நமது வழக்கமான பாணியில் எதிர்கொண்டுவிட வேண்டியதுதானே? இதற்கெல்லாம் எதற்கு முன்னெச்சரிக்கை... இன்னும் எத்தனை எத்தனை இயற்கை, செயற்கை பேரிடர் வந்தாலும், வரும்போது பார்த்துக்கொள்ளலாம், அவ்வளவுதானே. இதற்குபோய் எதற்கு வருத்தமோ, முன் எச்சரிக்கை நடவடிக்கையோ, நமது ‘இயல்பு வாழ்க்கை’க்கு திரும்ப வேண்டியதுதானே? உண்மையை புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்... -வெ.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்.