உள்ளூர் செய்திகள்

படிப்புகளில் வேறுபாடு ஏன்?

இன்றைய காலக்கட்டத்தில், எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து ஒரு மாணவனை புத்திசாலி என்று நாம் சொல்லிவிட முடியாது. மாணவனின் உள்ளார்ந்த திறமையை கண்டறிந்து, அதை வெளிக்கொணர்வதே உண்மையான கல்வி! அதற்கு, அனைத்து கல்வி நிறுவனங்களும், பலகைகள் மூலம் பாடம் நடத்தும் தற்போதைய கற்பிக்கும் முறையை உதறித்தள்ளி, ‘இன்டரேக்டிவ்’ முறையிலான கல்வி திட்டத்திற்கு மாற வேண்டும். இந்த மாற்றம், முதலில் பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும். அதை தவிர்த்து, கல்லூரிகளில் ‘பர்சானலிட்டி டெவலப்மென்ட்’ பயிற்சிகளை வழங்குவதால், பெரியளவிலான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்பதே நிஜம்! முன்பு, கலை அறிவியல் படிப்புகளை மதிப்பு குறைந்த படிப்புகளாகவே பார்த்தனர்; ‘தொழில் துறை சார்ந்த பாடங்களில் இடம்கிடைக்காதவர்கள் தான் கலை படிப்புகளில் சேர்கின்றனர்’ என்ற கண்ணோட்டம் இருந்தது. அந்தநிலை தற்போது இல்லை. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவ, மாணவியர்களிடையே நிலவும் கடும் போட்டியே இதற்கு உதாரணம்! இவ்வாறு, சமீப ஆண்டுகளில் பி.காம்., படிப்பிலும், அறிவியல் படிப்புகளிலும், அதற்கு அடுத்தபடியாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளிலும் சேர இன்றைய மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர். படித்து முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்பை பொறுத்தே, பாடப்பிரிவுகளை மதிப்பிடும் பழக்கம் இன்றும் உள்ளது. படிக்கும்போதே, துறை சார்ந்த வேலை வாய்ப்பு திறன் பயிற்சிகளை கூடுதலாக பெறுவதன் மூலம், வேலைவாய்ப்பு என்பது கலைப் பாடங்களை படிப்பவர்களுக்கு, எளிதான விஷயமாக மாறி விட்டது. வேலை வாய்ப்பு பெறும் வகையிலான சான்றிதழ் படிப்புகளையும் ஒரு கல்வி நிறுவனம் வழங்கும்போது, மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் நிச்சயம் இருக்காது! உதாரணமாக, எங்கள் கல்லூரியில் பி.ஏ., எக்னாமிக்ஸ் படிப்பில் அக்கவுன்டன்சி பாடம் சேர்த்தே கற்பிக்கப்படுகிறது. இதனோடு கூடுதலாக, மாணவர்கள் ‘டேலி’யில் பயிற்சி பெறும்போது, வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் வேலை வாய்ப்பு பிரகாசமாகிறது. எந்த ஒரு கல்வி நிறுவனமும், கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டையும் சமநிலையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டில், விளையாட்டுப் பிரிவு மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதோடுமட்டுமல்லாமல், தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணத்தில் விலக்கு அளிக்கலாம். இவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் என்பதற்கு எங்கள் கல்வி நிறுவனம் ஒரு சான்று! -முனைவர் எம்.வெங்கட்ரமணன், முதல்வர், துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !