அனைவருக்கும் பள்ளிக் கல்வி!
முறையாக பள்ளிக்கல்வியை நிறைவு செய்யாதவர்களும் திறந்தநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம், பள்ளி படிப்பை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது, தேசிய திறந்த நிலைப் பள்ளி - என்.ஐ.ஒ.எஸ்.,! இக்கல்வி நிறுவனத்தில் படித்து பெறப்படும் சான்றிதழ், அனைத்து பல்கலை, கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரவும், அரசு பணிகளில் சேரவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே தனது பள்ளி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், தங்களது மதிப்பெண்களை அதிகரிக்க இதில் சேரலாம். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ், 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. படிப்புகள்: உயர்நிலைக் கல்வி (10ம் வகுப்பு), மேல்நிலைக் கல்வி (12ம் வகுப்பு), தொழிற் பயிற்சி மற்றும் பல. பயிற்றுமொழி: இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், தெலுங்கு உட்பட ஒன்பது பயிற்று மொழிகளில் உயர்நிலை கல்வி வழங்கப்படுகிறது. இந்தி, ஆங்கிலம், உருது, பெங்காலி, குஜராத்தி மற்றும் ஒரியா ஆகிய பயிற்று மொழிகளில் மேல்நிலைக் கல்வி வழங்கப்படுகிறது. பாடப்பிரிவுகள்: உயர்நிலைக் கல்வி படிப்பவர்களுக்கு 17 மொழிப்பாடங்கள் உட்பட மொத்தம் 27 வகையான பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு மொழிப்பாடங்கள், மூன்று முக்கிய பாடங்கள் என ஐந்து பாடங்கள் கட்டாயம். கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளியல், பிசினஸ் ஸ்டடீஸ், ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, இந்தியன் கல்ச்சர் அன்ட் ஹெரிடேஜ், பெயின்டிங் போன்ற பாடங்களில் இருந்து நமது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்துகொள்ளலாம். மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு, கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல், வரலாறு, புவியியல், உளவியல் உள்பட 20 விதமான பாடங்கள் இருக்கின்றன. தொழிற்பிரிவு (வொகேஷனல்) படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தட்டச்சு, உணவு பராமரித்தல் மற்றும் தொழில்முறை சம்பந்தமான பல்வேறு பாடங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. தகுதிகள்: உயர்நிலைக் கல்விக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தன்னால் உயர்நிலைக் கல்வியை படிக்க முடியும் என்ற சுய சான்று அளிக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி பயில 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். வயது வரம்பு: உயர்நிலைக் கல்விக்கு குறைந்தது 14 வயதும், மேல்நிலைக் கல்விக்கு குறைந்தது 15 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் இல்லை. தேர்வு முறை: ஒரு ஆண்டில் இரண்டு முறை பொதுத்தேர்வு நடைபெறும். இக்கல்வி நிறுவனத்தில் சேர, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://www.nios.ac.in/