சாதனையாளர்களின் வெற்றி சூத்திரம்!
சாதனை படைக்க நாம் புதிய சூத்திரத்தை உருவாக்காவிட்டாலும், சாதித்தவர்களின் வெற்றி சூத்திரத்தை அறிந்து, அதில் நமக்கு தேவையானதை பின்பற்றி செயல்பட்டால், வெற்றி வாசல் நமக்கு மிக அருகில் தான்! நிமிடங்களில் கவனம்: வெற்றி வாகை சூடுபவர்கள் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் என்று புரிந்து செயல்படுகிறார்கள். நேரத்தை உயிர்போல மதிக்கிறார்கள். ‘இழந்த பணத்தைகூட ஈட்டிவிடலாம், ஆனால் இழந்தநேரத்தை மீட்க முடியாது’ என்று உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிட்டு செலவழித்து, திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள். நிமிடங்களைத் தொலைப்பவர்கள் மணிக்கணக்கில் என்ன ஆயிற்று என்று வருந்துகிறார்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயம்: அதிமுக்கிய ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அந்த விஷயத்தில் காலையிலேயே ஓரிரு மணி நேரங்களை செலவு செய்து இடையூறு எதுவும் நடுவில் வராத வண்ணம் செய்து முடிக்கிறார்கள். தினம் செய்ய வேண்டிய பட்டியல் கிடையாது: இன்று செய்ய வேண்டிய பட்டியலால், நிறைய பேருக்கு 41 சதவீத வேலை மட்டுமே ஒரு நாளைக்கு முடிகிறது. அதனால் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது. முடியாத வேலை, விடியாத வேளை என்றாகி விடுகிறது. வெற்றியாளர்கள், , பதிலாக நாட்காட்டியில் திட்டத்தை குறிக்கிறார்கள். காலண்டர் பார்த்து திட்டமிட்டு அந்தந்த நாளில் சரியாக பணிகளை நிறைவு செய்கிறார்கள். தள்ளிப்போடுவதை தள்ளிவைக்கிறார்கள்: நாளை என்பதை யாராலும் உறுதியோடு சொல்ல முடியாது. தினம் தினம் ப்ரெஷ் ஆக சாப்பிடவே காய்கறிகள் வாங்குகிறோம். வெற்றியாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கின்றனர். எதிர்காலம் அவர்கள் கண்ணில் புலப்படுகிறது. நாளை வரும் சிக்கல்களை எதிர்நோக்கி, சவால்களை எதிர்கொண்டு அதற்கு இன்றே விடை காண்கிறார்கள். எதற்கும் தயங்காமல் ‘நோ’ சொல்கிறார்கள்: மிகச்சிறந்த வெற்றியாளர்கள் துணிச்சலுடன் எதற்கும் ‘நோ’ என்கிறார்கள். எது இயலுமோ அதை செய்ய வேண்டும் உடனே. இயலாத நிலை வரக்கூடாது என்றால் இயன்றவரை தேவை அற்றவைக்கு ‘நோ’ என்று தயங்காது சொல்ல வேண்டும். பிறருக்காக யோசித்து நம்மை, நமது நேரத்தை இழந்து விடக்கூடாது. மாறாத காலை நிகழ்வுகள் ஒரு ரகசியம்: காலை நடைப்பயிற்சி, சிற்றுண்டி, சிறு சிறு உடற்பயிற்சி, தியானம் அல்லது பிரார்த்தனை, மனதிற்கு தெம்பு கொடுக்கும் சிறு வாசிப்பு, பாடல் கேட்டல், நல்ல குளியல், நிறைய குடிநீர் என்று மாறாத காலைக் கடமைகளை வெற்றியாளர்கள் கடைபிடிக்கிறார்கள். ஒரு பொருள் ஒரு முறை தான்: ஒரே தகவலை, ஒரே தாளை அல்லது பில்லை திரும்பத்திரும்ப பார்க்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. ஒரு முறைபார்த்துவிட்டு அதற்கான நடவடிக்கையில் இறங்குவதுதான் வெற்றியாளர்களின் சிறப்பு! புரிந்துகொள்ள, சற்று காலதாமதம் ஆனாலும் மீண்டும் அதே தகவலை அல்லது, செய்தியை தொடவோ படிக்கவோ செய்தால் நேரம் தான் விரயம். யார் தருவார் அதற்கு கிரயம்? ஒரு முறை பார்த்தோம், அதுதொடர்பான முடிவு செய்து செயல் செய்தோம் என்றால் மன அழுத்தம் நிச்சயம் கிடையாது. மறு வாசிப்பு, மறு பரிசீலனை, மறு செயல் இவை இனி வேண்டாம். சிலமுறை மட்டுமே ஈமெயில்: அதிக வெற்றிகளைப் பெறுபவர்கள் அடிக்கடி ஈமெயில் வந்திருக்கிறதா என்று கண்காணிப்பதில்லை. ஒவ்வொரு முறை டிங் என்று மணி அடிக்கும்போதும் என்ன தகவல் வந்துள்ளது என்று பார்ப்பதில்லை. அதற்கென நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் ஈமெயில் பார்த்து அதற்கான விடைகளை உடனுக்குடன் அனுப்புகிறார்கள். மூன்று வேளை உணவுபோல ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே கண்காணித்து அதற்குரிய செயலும் செய்து முடிக்கிறார்கள். சக்தியும் ஊக்கமும் தான் எல்லாமும்: ஒரு நாளின் நேரத்தை யாராலும் நீட்டிவிட முடியாது. ஆனால் ஒருவரின் சக்தி, உற்சாகம் மற்றும் சுய ஊக்கத்தை நிச்சயம் அதிகப்படுத்த முடியும். சக்தியும், உற்சாகமும் அதிகமாகும்போது, நமது செயல்பாட்டில் வேகம் பிறக்கிறது. வெற்றியாளர்கள் தேவையான உணவு, உறக்கம், ஓய்வு, குட்டி ‘பிரேக்’ எடுத்துக் கொள்கிறார்கள். ஏன்னெனில் அவை தான் செயல்பாட்டினை உத்வேகப்படுத்துகிறது. தொடர் வேலையில் இல்லை வெற்றி! கைப்புத்தகம் வெற்றி மயம்: பல வெற்றியாளர்கள் வெளிப்படையாகச் சொன்னது என்னவென்றால், அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது அவர்களின் கைப்புத்தகத்தினால் தான். எதுவாக இருந்தாலும், அதில் குறித்துக்கொள்ளுதல், வேலை முடிந்தவுடன் அதனை ‘டிக்’ செய்து உற்சாகப்படுத்திக்கொள்ளுதல் நல்லது. கைப்புத்தகம் ஒன்று இருந்தால் எல்லாவற்றிற்கும் நமது நினைவாற்றலை நம்பி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமா? சரியாகவும், நேர்த்தியாகவும் நமது செயல்பாடு இருக்க கைப்புத்தகம் உதவுகிறது. வெற்றிச்சூத்திரங்கள் அறிந்தால் ஜெயமே: வெற்றியாளர்கள் செய்வதை அறிந்துகொள்ளுதல், அவற்றைப் பின்பற்றுதல், அந்த செயல்பாடுகளை ஆய்வு செய்து புரிந்துகொள்ளுதல், அவற்றை நமக்கேற்றபடி சிறு மாற்றங்கள் செய்து செயல்படுத்துதல், இவை எல்லாமே, ‘நாம் அதிகம் உழைக்கிறோம், குறைவான மதிப்பும் ஊதியமும் பெறுகிறோம்’ என்ற நினைப்பில் இருந்து நம்மை மாற்றி வழிகாட்டுகிறது. கோடீஸ்வரர்கள் செய்வதை நாம் ஏன் செய்யக்கூடாது? வெற்றிச் சூத்திரம் நாமும் அறிவோம். நாளும் மகிழ்வோம்! -முனைவர். பாலசாண்டில்யன்