கல்வி நிறுவனங்களின் கடமைகள்!
ஒரு கல்வி நிறுவனத்தில், சேர்க்கை பெறும் மாணவர்களின் தரம், ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய மூன்றைப் பொறுத்து அக்கல்வி நிறுவனம் எப்படிப்பட்டது என அறிந்துகொள்ள முடியும். மேலும், பாடத்திட்டம், ஆராய்ச்சி வாய்ப்புகள், தொழில் நிறுவனங்களுடனான இணக்கம், தேசிய மற்றும் சர்வதேச தரவரிசை ஆகியவை ஒரு கல்வி நிறுவனத்தை பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும் அம்சங்கள்! சுய ஆய்வுஇவற்றை உணர்ந்து, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், அவர்களே அவர்களை சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும். குறிப்பாக, பாடத்திட்டம் முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளதா? அவை தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுகிறதா? பாடத்திட்ட வடிவமைப்பில் தொழில்நிறுவன வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளார்களா? என்பனவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்து, அதற்கேட்ப, உரிய மாற்றங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மேற்கொள்ள வேண்டும். இன்டஸ்டிரியல் விசிட், இன்டர்ன்ஷிப் போன்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்களை, தொடர்ந்து அனுப்ப வேண்டியதும் கல்வி நிறுவனங்களின் பிரதான கடமை. தொழில் நிறுவனங்களுக்கு, அடிக்கடி செல்லும் போது, வகுப்பறையில் பெற்ற கல்வியை, செயல்முறையில் பயன்படுத்துவற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெறுவர்! மேலும், நிறுவனங்கள், எந்தெந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன? துறை சார்ந்து என்னென்ன திறன்கள் தேவைப்படுகின்றன? என்பனவற்றை அறிந்து, அதற்கேட்ப, மாணவர்களால் அவர்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். விழிப்புணர்வு இணையதளம் வாயிலாக, யுடியூப், வாட்ஸ் ஆப், பேஸ்புக், லிங்க்டுஇன் மூலம் கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள், இன்று மாணவர்களுக்கு உள்ளன. அதேசமயம், அவற்றை எதிர்மறையாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. ‘தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தி, வாய்ப்புகளை வசமாக்கினால் மாணவர்களால், வாழ்க்கையில் சிறகடித்து பறக்க முடியும்’, என்ற விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவில் விதிக்கப்பட உள்ள விசா கட்டுப்பாடுகளுக்கு, இந்திய மாணவர்கள் கவலைப்பட துவங்கியுள்ளனர். கல்வி என்பது, ஒட்டுமொத்த வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும் வாய்ப்பாக பார்க்கவேண்டுமே தவிர, வேலை பெறுவதற்கான காரணியாக மட்டும் பார்க்கக்கூடாது. வேலை பெற்றுத்தருவதல்ல கல்வி. சிந்தனைத்திறனை தூண்டி, வாழ்வின் சாராம்சத்தை உணரச்செய்து, சுயமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுவது ‘கல்வி’! இந்த உண்மையை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டியதும் கல்வி நிறுவனங்கள் தான்! -கே.வி.டி. கிஷோர் குமார், துணைத் தலைவர், வேல்டெக் டாக்டர் ஆர்.ஆர். அண்ட் டாக்டர் எஸ்.ஆர். பல்கலைக்கழகம், சென்னை.