வெற்றிக்கான துவக்கம் ‘பயிற்சி’!
அந்தக் காலத்தில் பள்ளி செல்லும் சிறிய குழந்தைகளின் தமிழ் பாடப் புத்தக்கத்தில், கீழ்கண்ட ஔவையர் பாடல் இருக்கும்! சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் - நித்தம்நடையும், நடைப் பழக்கம்! அந்த பாடல் வாழ்க்கையில் நாம் முன்னேற எளிய வழியைச் சொல்கிறது! ஒரு மனிதன் எந்தத் துறையில் முன்னுக்கு வருவதாக இருந்தாலும் அதற்கு திட்டமிட்டு பயிற்சி செய்வது மிக மிக அவசியம்! அந்தப் பயிற்சியைத்தான் தமிழில் பழக்கம் என்று அந்தக் காலத்திலேயே ஔவையார் சொல்லியிருக்கிறார். ஓவியத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பின்னால் இருக்கும், அவர்களது பயிற்சியை யோசித்துப் பார்த்தீர்களா? அதேபோல் ஒரு முன்னணி பாடகர் ஆகட்டும், ஒரு விளையாட்டு வீரராக இருக்கட்டும், அவர்கள் அந்த அந்த துறைகளில் செய்த பயிற்சிக்கு எடுத்துக் கொண்ட நேரம் உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது. அவர்கள் வெற்றிக்கு அவர்களின் திட்டமிட்ட பயிற்சிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது! சரியான திட்டம் தீட்டி அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது! அப்படி திட்டமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபடுபவர்கள், காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே உற்சாகமாக எழுவார்கள். உற்சாகம் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டு, காலையில் படுக்கையிலிருந்து எழுந்து வருபவர்களிடம் திட்டமும் இருக்காது! நல்ல பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஈடுபாடும் இருக்காது! உற்சாகம் தான் நமது உயர்வுக்கு வழிகாட்டி! யாருக்கு உற்சாகம் இல்லை என்று கவனித்திருக்கிறீர்களா? வாழ்க்கையில் முன்னேறுவோம் என்ற தன்னம்பிக்கை யாருக்கு இல்லையோ, அவர்களுக்குத்தான் உற்சாகம் இருக்காது! தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனுடைய முதுகெலும்பு! வாழ்க்கை என்ற ஓட்டப் பந்தயத்தில் முதுகெலும்பு இல்லாத மனிதன் கலந்து கொண்டு வெற்றியடைய முடியாது. அவர்கள் தொடக்கத்திலேயே அருகில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்ற இருபது அடி பள்ளத்தில் விழுந்து விடுவார்கள்! பள்ளி மாணவன் ஒருவன் 6ம் வகுப்பில் பெயிலாகி விட்டான். அவனுக்கு நிறைய தன்னம்பிக்கையும் இருந்தது. தாழ்வு மனப்பான்மையை கிட்ட நெருங்க விடாத மன உறுதியும் இருந்தது! தான் விரும்பிய துறையில் திட்டமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டான்! அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைத்ததா? அவன் பெயரைச் சொல்கிறேன். நீங்களே புரிந்து கொள்வீர்கள்! அந்த ஆறாவது வகுப்பில் பெயிலான அந்த மாணவன் பெயர் சர். வின்ஸ்டன் சர்ச்சில்! பயிற்சி செய்து, தயார்படுத்திக் கொண்டால் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயமே! -துடுப்பதி ரகுநாதன்