உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வால் நன்மையே!

எங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஏராளமானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலான பெற்றோர் போதிய கல்வி அறிவு பெறாதவர்கள். இத்தகைய பின்புலத்தைக் கொண்ட மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதையே குறிகோளாகக் கொண்டுள்ளோம்.அப்ஜெக்டிவ், காம்ப்ரெஹென்சிவ் என எந்த வடிவிலான கேள்வியையும் அணுகும் முறை குறித்து பயிற்சி அளிக்கிறோம். சமீபகாலமாக, 'கிரியேட்டிவ் ரைட்டிங்’கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேள்விகள் அதிகம் இடம்பெறுவதால், அதற்கேட்ப பயிற்சி பெற்று தேர்வு எழுதவேண்டியுள்ளது. இதை உணர்ந்து, அதற்கும் உரிய பயிற்சியை அளிக்கிறோம். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது, 15 முறை தேர்வு நடத்துகிறோம். அதனால், அனைத்து பாடங்களிலும் நிபுணத்துவம் பெறுவதோடு, தேர்வு பயம் விலகி, தேர்வை அணுகும் விதத்தையும் நன்கு புரிந்துகொள்கின்றனர். நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிப்பதால், எங்கள் பள்ளி மாணவர்களால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண் பெற முடிகிறது. மாணவர்கள், பள்ளி பொதுத்தேர்வுக்கும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கும் தயாராவது சிரமமாக தோன்றினாலும், அதனால் அதிகமான நன்மைகளே கிடைக்கின்றன. இரண்டு தேர்விலும் கவனம் செலுத்தி, கூடுதல் பாடங்களை கற்பதால், மாணவர்களது அறிவும், கற்கும் திறனும் மேம்படுகிறது. சிந்தித்து எழுதும் திறனும் மாணவர்களிடம் மேம்படுவதை பார்க்க முடிகிறது. மாணவர்கள், பெற்றோரிடம் கலந்துரையாடி, மாணவர்களின் எதிர்கால உயர்கல்வி விருப்பத்தைப் பொருத்து, அதற்கேட்ப சிறப்பு கவனம் எடுத்து, பயிற்சி அளிக்கிறோம். வரும்காலத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் வழங்கும் பள்ளியும், கலை கல்லூரியும் துவங்க திட்டமிட்டு வருகிறோம்.அனைத்திலும், இன்று பெற்றோர்களைவிட, மாணவர்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எனினும், மாணவர்கள் மீது பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாணவர்களின் நடவடிக்கைகளை பின்னிருந்து, கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் திசை மாறி செல்வது போல் தோன்றும்போது, உரிய ஆலோசனை வழங்கி சரியான வழியில் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். இத்தருணத்தில், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. -ஹேமலதா, முதல்வர், புளூபேர்டு பள்ளி, பல்லடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !