உள்ளூர் செய்திகள்

வளர்க்க வேண்டிய ஆர்வம், தன்னம்பிக்கை

நோபல் வென்ற தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், முதலில் மருத்துவம் படிக்க விரும்பினார். அது கிடைத்த போதிலும் கூட, அவருக்கு இயற்பியலில் நாட்டம் ஏற்படவே, அதில் பட்டம் பெற்றார். இயற்பியலில் ஆராய்ச்சி செய்த அவருக்கு, உயிரியலில் நாட்டம் ஏற்படவே, அத்துறையில் ஆய்வு செய்தார். தற்போது உயிரி-இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் அவருடைய ரிபோசோம் அணுக்கட்டமைப்பு கண்டுபிடிப்பு, நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்கு உதவும் என்பதால் அவருக்கு வேதியல் துறைக்கான நோபல் வழங்கப்பட்டது. நோபல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் பேசியதன் தொகுப்பு: ஆங்கிலம் சர்வதேச மொழி என்பதால் அதில் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவது அவசியம். ஆங்கிலம் தெரியாவிட்டால், பாதகம் அடைய வாய்ப்புள்ளது. தகவல் தொடர்பும் கொள்ள முடியாது. அத்துடன் பாடப்புத்தகங்கள், இதழ்களைப் படிக்க முடியாது. எப்போதுமே மாணவர்கள், தங்களுடைய ஆர்வத்தின் படியே செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். வளர்ந்துவிட்ட நாடுகளைப் பார்த்து, மனதளவில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. நான் படிக்கும் போது, அமெரிக்காவிலிருந்து திரும்பிய பேராசிரியர்களைக் கொண்டு பாடத்திட்டம் அமைக்கப்பட்டது. இயற்பியல் படிக்க இது எனக்கு ஊக்கம் அளித்தது. 30 ஆண்டுகளுக்குப் பின், ஹார்வர்டில் என் மகன் அதே போன்ற பாடத்திட்டத்தை படித்தான். சில நேரங்களில், சிறந்தஇயற்பியலாளராகப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஆழமான விஷயம் அல்லாமல் வெறும் கணக்கீடுகளை மட்டுமே செய்வது எனக்கு சலித்துப் போனது. இயற்பியல் எனும் தளத்தில் நான் இல்லை என்பதை உணர்ந்தேன். தற்போது அடிப்படை அளவில் பெரிய கண்டுபிடிப்புகளை இயற்பியலில் நிகழ்த்துவது என்பது தற்போது கடினமாகவே உள்ளது. அந்நேரத்தில் மூலக்கூறு உயிரியல் மலரத் தொடங்கியது. அப்போது ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டுபிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. அறிஞர் பிரான்சிஸ் கிரிக்ஸ் இயற்பியல் துறையிலிருந்து, உயிரியல் துறைக்கு மாறியவர். கிரிக்ஸ் முதலில் கட்டமைப்பு உயிரியல், பின்னர் பொது மூலக்கூறு உயிரியல் அதன்பின்னர் நியூரோ உயிரியலுக்கு மாறினார். அவர் மாபெரும் அறிவாளி. அவருக்கு இணை அவர்தான். நானும் நினைத்தேன் நாம் ஏன் மாறக்கூடாது என்று. இரண்டாவது பிஎச்.டி., படித்தேன். பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் பீட்டர் மூர் எனும் பேராசிரியரிடம் 1978ல் ரிபோசோம் ஆய்வுக்காக சேர்ந்தேன். இதுதான் எனது ரிபோசோம் ஆய்வுக்கான அறிமுகம். இயற்பியல் அடிப்படை இருந்ததால் நான் எப்போதுமே கணக்கீடுகளை மேற்கொள்வதிலும், கம்ப்யூட்டர்களை உபயோகிப்பதிலும் தயங்கியதில்லை. என்னுடைய ஆய்வுகளுக்கு இயற்பியல் உதவியது. இயற்பியலில் இருந்து உயிரியலுக்கு மாறிய அனைவரும் சிறப்பாக செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. உயிரியலாளராக ஆகாமல் உயிரியலில் ஆய்வு செய்தால் அது இரண்டாம் தரமாக, யாருக்கும் பயன்படாமல் போகும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது. சிலர் என்னைப் போல் வகுப்புகளுக்குச் சென்று உயிரியல் கற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, உயிரியலை கற்றுக் கொண்டவர்களும் உண்டு. அவ்வாறு கற்றுக்கொள்கிறவர்களுக்கு இயற்பியல் பின்னணி கொஞ்சம் உதவும். சில நேரங்களில் உதவாமல் போகும் வாய்ப்பும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !