ஓட்டல் மேனேஜ்மென்ட் திறனுக்கு காத்திருக்கும் தாஜ் குழுமம்
இந்திய ஓட்டல் கம்பெனி லிமிடெட் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்து' தாஜ் ஓட்டல்ஸ் ரிசார்ட்ஸ் அண்டு பேலசஸ்' என்று கூறுகிறார்கள். ஆசியாவிலேயே இந்தக் குழுமம் மிகவும் பெரியதாகவும், சிறந்ததாகவும் திகழ்கிறது. தாஜ் ஓட்டல்கள் இந்தியாவின் 45 மையங்களிலும், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பூடான், இலங்கை, ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 சர்வ தேச மையங்களிலும் இயங்குகின்றன. தாஜ் குழுமத்தில் வரும் 20102011 நிதியாண்டில் புதிதாக 1500 பேர் புதிதாகப் பணி நியமனம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் புதிதாக 15 கிளைகளை இந்த குழுமம் திறக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதிச் சிக்கல் ஓட்டல் துறையையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவிலேயே பணி நியமனங்கள் செய்யப்பட்டன. தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றமான நிலையினால் இந்தப் புதிய பணி நியமனங்கள் செய்யப்படுவதாக தாஜ் குழுமத்தின் முதுநிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு மும்பையிலுள்ள தாஜ் ஓட்டல் இலக்கானதால் புதிய பணி நியமனங்களை மிகுந்த அக்கறையுடன் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.