பசுமை வாழ்விற்கான டிப்ஸ்
கால்நடைகளால் <18 சதவீத கிரீன் ஹவுஸ் வாயுக்கள் உலகம் முழுவதும் அதிகரிக்கிறது. இது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியதாகும். அதனால் நாம் சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். குறைந்தபட்சம் மாட்டிறைச்சியையாவது தவிர்க்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக பயன்படுத்திய தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் அளவை குறித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் அளவில் 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதை இலக்காக வையுங்கள். இதன் மாற்றத்தை நீங்களே உணர்ந்து பயனடைவீர்கள். உங்களது அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ கரியமிலவாயுவின் அடிச்சுவடு குறித்த வரைபடம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வழிகளில் எல்லாம் கரியமிலவாயு அதிகரிக்கிறது என்பதை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, இதன் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது. வேக வைக்காத காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும். நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஆற்றலையும் சேமிக்கலாம். நமது தேவைகள் சிலவற்றுக்கு சூரிய சக்தி மூலம் கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் 95 சதவீத பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுபயன்பாடு செய்யப்படுவதில்லை. இதனால் பாட்டில் தண்ணீருக்கு விடை கொடுத்து விட்டு, வடிகட்டிய குழாய் தண்ணீரை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் பணமும் மிச்சமாகும், இவ்வுலகமும் பசுமையாக இருக்கும். உங்களுக்கு பிடித்தமான நபருக்கு பூக்களை கொடுப்பதை விட, உயிருள்ள தாவரத்தை பரிசாக கொடுக்கலாம். தாவரம் நீண்ட காலத்திற்கு பசுமையாக இருக்கும். ஆனால், பூக்கள் சில நிமிடங்களிலே வாடி குப்பைத் தொட்டியைத் தான் அலங்கரிக்கும். பயன்படுத்திய காலியான பால் கொள்கலனில் பூக்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் உள்ள கன்டென்சர் காயில்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் குளிர்சாதனப் பெட்டியின் ஆற்றல் அதிகரிக்கும். மின்சாரமும் சிக்கனமாகும். உங்களது வீட்டு உபயோக சாதனங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் திறனும் அதிகரிக்கும். நீண்ட காலமும் உழைக்கும். ரொம்ப பழைய சாதனங்களை மாற்றி விடுவது மிகவும் நல்லது. குறைந்த தூர பயணத்திற்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். சைக்கிளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள். பிரிட்ஜை காரணமில்லாமல் திறப்பதும், திறந்தால் மூடாமல் இருப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொண்டு ஏ.சி., யை பயன்படுத்தாதீர்கள். எந்த பொருட்களையெல்லாம் மறுபடியும் பயன்படுத்த முடியுமோ, அவற்றை மட்டும் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள். தூய்மையான தண்ணீரில் பாத்திரங்களை கழுவுவதை தவிர்த்து விடுங்கள். போக்குவரத்து சிக்னல், போக்குவரத்து நெருக்கடி ஆகிய இடங்களில் இன்ஜினை ஆப் செய்து விடுங்கள். ரோட்டில் நண்பரை பார்த்து பேசும் போதும், மொபைல் போன் பேசும் போதும் இன்ஜினை ஆப் செய்து விடுங்கள். இயற்கை வளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். கட்டட வேலைக்கு பயன்படுத்தப்படும் மரத்துண்டுகள் மற்றும் எழுதப் பயன்படும் பேப்பர்கள் உள்ளிட்டவற்றை குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். பலூன்களை பறக்க விட்டு மகிழ்வதை, ஓர் எல்லைக்குள் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். அதிகமான மரக்கன்றுகளை நடுங்கள். பயன்பாடு இல்லாத போது கம்ப்யூட்டர்களை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள். பிற இடங்களுக்கு செல்வதற்கு பொது பேருந்துகளை பயன்படுத்துங்கள். வேண்டுமென்றால், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வாகனத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.