உள்ளூர் செய்திகள்

அறிவோம்... மீடியா மேனேஜ்மென்ட்

மீடியா மேனேஜ்மென்ட் துறை மாணவர்கள் மத்தியில் அறிமுகம் ஆகி வருகிறது. இத்துறையில் கால்பதிக்கும் முன் மாணவர்கள் அத்துறையைப் பற்றியும் பின்னணியைப் பற்றியும் அறிந்து கொள்வது நல்லது. மீடியா மேனேஜ்மென்ட் படிப்புகளை பிஸ்கூல்களே அதிகம் வழங்குகின்றன. இதழியல் துறைகள் இப்படிப்புகளை பொதுவாக வழங்குவதில்லை. மீடியா நிர்வாகம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்கள் இத்துறையை தேர்வு செய்யலாம். ஆனால், மீடியா தொடர்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று, விரும்புவோர் இங்கு அது தொடர்பாக குறைவாகவே கற்பிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பிஸ்கூல்கள் மீடியா என்பதை வர்த்தகக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும். அல்லது மீடியாவை ஒரு விற்பனைப் பொருளாக மட்டுமே கருதும். ஆனால் மீடியாவைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறாமல், மீடியா மேனேஜ்மென்டில் நிர்வாகம் பற்றித் தெரிந்து கொள்வது சரியாக இருக்குமா?மீடியா மேனேஜ்மென்ட் என்பதில் உள்ள "மேனேஜ்மென்ட்' என்ற வார்த்தை, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு அதிக சம்பளம் உள்ள பதவிகளைப் பெற்றுத் தருகிறது. ஆகவே, அந்த பின்னொட்டை எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில் "மீடியா' என்பதில் உள்ள கலை மற்றும் அறிவில் விஷயம் சார்ந்த விஷயங்களை அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். இவ்விஷயத்தில் பிஸ்கூல்கள், ஊடகவியல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதழியல் துறையில் படித்தவர்களுக்கோ அல்லது இதழியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கோ மீடியா மேனேஜ்மென்ட் படிப்பு வழங் கப்பட வேண்டும். இதழியல் மற்றும் ஊடகவியல் கண்ணோட்டத்தோடு பாடத்திட்டம் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்து, மீடியாத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாலும், ஐ.பி.எல்., போன்ற மீடியா வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்து வருவதாலும், பிஸ்கூல்கள் மீடியா மேனேஜ்மென்ட் படிப்புகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. தேனைத் தேடி வண்டுகள் செல்வது போல், பணம் கொழிக்கும் துறைகளையும் பிஸ்கூல்கள் குறிவைக்கின்றன. விஷூவல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் பிற கம்யூனிகேஷன் துறைகளைப் போல், மீடியா மேனேஜ்மென்ட் முடித்தவர்களும் அதிகளவில் வெளியேறினால், சில நேரங்களில் மீடியா மேனேஜர்களும், தகவல் தொழில்நுட்பத் துறையைப் போல், 810 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைபார்க்கும் நிலை ஏற்படலாம். இதை பிஸ்கூல் நிறுவனத்தார்கள் உணர்ந்துள்ளார்களா என்பது தெரியவில்லை. மீடியா மேனேஜ்மென்ட் என்ற கவர்ச்சிப் போர்வையில் பட்டப்படிப்பு படிப்பு முடிக்கும் மாணவர்கள் இழுக்கப்படலாம். நுழைவுத் தேர்வு எழுதி, தொழில்துறையினராக வெளியேறினாலும் கூட, இப்படிப்பால், "டிவி' மீடியாவில் புகுந்துவிட்ட அதே "பழைய மாவான' "ரியாலிட்டி ஷோவை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. "டிவி'யில் காண்பிக்கப்படும் ஆட்டம்... பாட்டம்... நிகழ்ச்சிகள் உண்மையான அறிவு வளர்ச்சிக்கு உதவுவதில்லை. அதில் பெற் றோர்கள் வேறு... பிள்ளைகளை  போட்டிக்கு தயாராக்க போட்டி போடுகின்றனர். நல்ல விவாதங்கள் நடக்கும் நிகழ்ச்சிகளை ரசிக்காதவரை, உரையாடல் நிகழ்ச்சி வடிவங்கள் மாறப்போவதில்லை. மீடியா மேனேஜ்மென்ட் படிப்பை வழங்கும் பிஸ்கூல் அல்லது மற்ற துறைகள் இந்த நிகழ்ச்சிகள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !