உள்ளூர் செய்திகள்

விரைவில் மருத்துவக் கல்வித் துறையில் மாற்றங்கள்?

இந்திய மருத்துவக் கழகம் என்னும் மிகப் பெரிய கவுரவமான அமைப்பு சமீபத்தில் அதன் தலைவரின் தேச துரோக செயல்களால் இன்று தனது மதிப்பை இழந்து நிற்பதை அறிவோம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்காக சாதாரண இந்தியனுக்கு எதிர்கால மருத்துவம் கிடைப்பதை அடகு வைத்த அதன் தலைவர் கேதன் தேசாய் போல எதிர்காலத்திலும் எவரும் செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு விரைவில் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இது தொடர்பாக சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். சுகாதாரத்திற்கான தேசிய கவுன்சில் ஒன்று விரைவில் நிறுவப்படவுள்ளது. இதற்கான வரைவு ஒன்றை மத்திய அரசு பார்லிமெண்டில் தாக்கல் செய்துள்ளது. 1956ல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய மருத்துவக்கழகக் கட்டுப்பாட்டு சட்டம் காலாவதியான ஒன்று என்பதால் 2005ல் இதில் சில திருத்தங்களைக் கொண்டு வர அப்போதைய மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் பார்லிமென்டின் குழு ஒன்று இதை நிராகரித்து விட்டது. இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தால், இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவராக ஒருவர் 2 தடவைக்கு மேல் இருக்க முடியாது. இதே போல உதவித் தலைவரும் 2 தடவை தான் பதவியில் இருக்க முடியும். ஆனால் கேதன் தேசாய் பல ஆண்டுகளாக தலைவராக இருந்ததன் விளைவை நாம் இன்று பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கிறோம். எனவே விரைவில் மருத்துக் கல்வியிலும் தடாலடி மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !