உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் நுழைவுத் தேர்வே சிறந்தது....

ஆண்டு தோறும் இந்தியாவில் பட்டப்படிப்புக்குப் பின் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்காக போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் என்ற தகவலை அறிவீர்களா? 9 ஐ.ஐ.எம்.,கள், டில்லியின் எப்.எம்.எஸ்., நர்ஸி மோஞ்சி மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட், எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஆகிய நாட்டின் தலைசிறந்த னேஜ்மென்ட் நிறுவனங்களில் எம்.பி.ஏ., போன்ற உயர் மேலாண்மை படிப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகள் குறித்து கல்வியாளர்கள் தற்போது விவாதித்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை நாட்டிலுள்ள மேலும் 200 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன.  ஐ.ஐ.எம்.,களில் சேர ஆண்டு தாறும் அதிகரித்து வரும் போட்டியாளர்களின் எண்ணிக்கையால் கேட் தேர்வு முறையை கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஜிமேட் தேர்வு போன்று வடிவமைக்கலாம் என்னும் யோசனை தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.  ஜிமேட் தேர்வில் சைக்கோமெட்ரிக் அனலிசிஸ் எனப்படும் உளவியல் ரீதியில் போட்டியாளரின் நுண்ணறிவு பரிசோதிக்கப்படுகிறது. இந்தத் தேர்வின் உயரிய தரத்தால் உலகெங்கும் 1800 முன்னணி மேலாண்மை நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் படிக்க விரும்பும் மாணவர்களை ஜிமேட் ஸ்கோரின் அடிப்படையில் சேர்த்துக் கொள்கின்றன.  இந்தத் தேர்வின் அடிப்படை மாதிரியில் நம் நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக பரிசோதனை முறையில் கம்ப்யூட்டர் அடிப்படையிலான நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் கால சேமிப்பு, தேர்வு நாளை மாற்றியமைக்கும் வசதி, கேள்வித்தாள் வெளியாகாமல் பாதுகாக்கும் வசதி போன்ற பயன்கள் கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கு சாதகமாகக் கூறப்படுகின்றன. இதை எக்ஸ்.எல்.ஆர்.ஐ., மற்றும் எப்.எம்.எஸ்., ஆகியவை வெற்றிகரமாகக் கையாண்டு வருகின்றன. ஐ.ஐ.எம்.,களின் கேட் தேர்வானது ஒரே நாளில் நடத்தப்படாமல் கடந்த ஆண்டு 10 நாள் கால இடைவெளிக்குள் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்னும் அடிப்படையில் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு இது 20 நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நர்ஸி மோஞ்சியின் என்மேட் தேர்வானது போட்டியாளருக்கு வசதியாக 90 நாள் இடைவெளிக்குள் நடத்தப்படுகிறது. இதை ஒரு போட்டியாளர் 3 தடவை எழுதலாம். 3 தடவைகளில் எடுக்கும் மதிப்பெண்களில் எது அதிகமானதோ அதை கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். இதில் நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது என்பதே முக்கியமான அம்சம். உலகின் தலைசிறந்த தேர்வுகளான ஜிமேட், எல்சாட், ஜிஆர்இ போன்றவற்றிலும் நெகடிவ் மதிப்பெண் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களினால் விரைவில் நாட்டின் மேனேஜ்மென்ட் தேர்வுகள் அனைத்துமே கம்ப்யூட்டர் அடிப்படையிலான நுழைவுத் தேர்வுகளாக மாறிவிடும் என்றே எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !