குறைந்த செலவில் மருத்துவம் படிக்க நினைத்த மாணவிகளின் கனவு சிதைந்தது: மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் பறிபோன நர்சிங் கல்லுாரி
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு 20 ஏக்கர் வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் நர்சிங் கல்லுாரி அமைக்கும் திட்டத்தில் விருதுநகர் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் ஆண்டுக்கு 100 செவிலியர் இடங்கள் பறிபோகி மருத்துவம் படிக்க நினைத்த மாணவிகளின் கனவு சிதைந்துவிட்டது.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன., 12ல் திறக்கப்பட்டது. 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி துவங்க 2023ல் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் அனுமதி அளித்தது. மேலும் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நர்சிங் கல்லுாரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை அன்றைய டீன் சங்குமணி, துணை முதல்வர் அனிதா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நர்சிங் கல்லுாரி கட்டுமானத்திற்கு 17 ஆயிரம் சதுரடியும், விடுதிக்கு 15 ஆயிரம் சதுரடியும் கொண்ட இடங்கள் வேண்டும் என கோரப்பட்டது. பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி துவங்க தேவையான நிலம் இல்லாததால் கட்டமைப்பு, விடுதிகளை அமைக்க மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு பின்புறம் உள்ள 20 ஏக்கரை கொடுப்பதாக தெரிவித்தது.ஆனால் சொன்னபடி மாவட்ட நிர்வாகம் நிலம் வழங்காமல் தயக்கம் காட்டி அலட்சியமாக செயல்பட்டதால் தற்போது நர்சிங் கல்லுாரி துவங்க தேவையான நிலம் இல்லை என விருதுநகர் நிராகரிக்கப்பட்டுள்ளது.புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளான நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலையுடன் சேர்த்து திருச்சி, திருநெல்வேலி, வேலுாரில் அரசு பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி ஆண்டுக்கு தலா 100 இடங்களுடன் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் வாக்குறுதியின் படி நிலம் வழங்கியிருந்தால் மாவட்டத்தில் குறைந்த செலவில் நர்சிங் படிக்க காத்திருந்த மாணவிகளின் கனவு சாத்தியமாகி இருக்கும். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், சொன்னப்படி 20 ஏக்கரை வழங்காததாலும் அரசு நர்சிங் கல்லுாரி அமைக்கும் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. மருத்துவ படிக்க நினைத்த மாணவிகளின் கனவை மாவட்ட நிர்வாகமே சிதைத்துவிட்டது.