உள்ளூர் செய்திகள்

கூடுதல் கட்டடம் கட்டும் பணி தாமதம் - மரத்தின் அடியில் மாணவர்கள்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டும் பணி தாமதமாக நடந்து வருவதால், மாணவர்களை கட்டத்தின் முன்புறமும், மரத்தின் அடியில் அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது. தற்போது மழை காரணமாக மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், கிணத்துக்கடவு, சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், கொண்டம்பட்டி, கோதவாடி, சூலக்கல், நெ.10 முத்துார், கோவிந்தாபுரம், வடபுதுார், கல்லாபுரம், சொலவம்பாளையம், அரசம்பாளையம் உட்பட பல கிராமங்களில் இருந்தும் வந்து மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு 972 மாணவர்களும், 909 மாணவியரும் படித்தனர். தற்போதும், பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டை விட கூடுதல் மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கவுள்ளனர். இப்பள்ளிக்கு பழைய கட்டடங்கள் உள்ளன. இப்பள்ளி துவங்கிய காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. மழை காலங்களில் கட்டடங்களில் இருந்து மழைநீர் கசிந்து மாணவர்கள் மீது விழுகிறது. தற்போது, ஒன்பதாம் வகுப்பில் 10 பிரிவுகளிலும், எட்டாம் வகுப்பில் மூன்று பிரிவுகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்க்கு வகுப்பறை இல்லை.இவர்கள், மரத்தடியிலும், கட்டடத்தின் திண்ணையிலும் அமர வைத்து ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது, பருவ மழை கடந்த மூன்று வாரங்களாக பெய்து வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் வகுப்பறை இல்லாமல், சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக, கடந்த 2012ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் 229 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு அடுக்குமாடியில் 18 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. மேலும், 60 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.இந்நிதி வராததால், கட்டடத்தின் மேல், சுருக்கி போடுவது, வகுப்பறையில் கதவு, ஜன்னல் பொருத்துவது, தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்க்கு பாலீஸ் போடுவது, பெயிண்டிங், வகுப்பறையில் செல்ப் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கூடுதல் நிதியும், நிலுவையில் உள்ள நிதியும் சேர்ந்து 85 லட்சம் ரூபாய் நிதி வந்தால் மட்டுமே கட்டட பணி நிறைவு பெறும். இதற்கு, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். நிதி வந்தவுடன் கட்டடப்பணி நிறைவடையும் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "வகுப்பறை கட்டும் பணி தாமதம் காரணமாகவும், தற்போது பெய்து வரும் மழையாலும், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு கடந்த வாரத்தில் மாறி மாறி விடுமுறை விடப்பட்டு, அதில், ஒன்பதாம் வகுப்பு மற்றும், எட்டாம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது, மழை குறைந்து வருவதால், மீண்டும் மாணவ, மாணவியர்க்கு வழக்கம் போல், கட்டட திண்ணையிலும், மரத்தடியிலும் பாடம் எடுக்கப்படவுள்ளது. மேலும், இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வந்ததும், கட்டடம் கட்டும் பணி நிறைவு பெறும். பின்னர் நிரந்தரமாக வகுப்பறையில் பாடம் எடுக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்