உள்ளூர் செய்திகள்

அன்று புத்தக திருடன்; இன்று எழுத்தாளர்: கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கொச்சி: கேரளாவில் சிறு வயதில் புத்தகம் திருடிய சிறுவன், இன்று ஓர் எழுத்தாளராக மாறிய நிலையில், அவருடைய புத்தகம் அதே கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறியுள்ளது.பிரபல ஆங்கில எழுத்தாளரான ஜே.கே.ரவுலிங்கின், ஹாரி பாட்டர் வரிசையில் வந்த நாவல்கள் கடந்த 1990ன் இறுதியிலும், 2000ம் ஆண்டு துவக்கத்திலும் விற்பனையில் சக்கைபோடு போட்டன; திரைப்படங்களாகவும் வெளியாகின.இந்த புத்தகங்கள் அந்தக் கால சிறுவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்ததுடன், படிக்கும் ஆர்வத்தையும் துாண்டின. அந்த வரிசையில் வெளியான ஹாரி பாட்டர் அண்டு தி டெத்லி ஹாலோஸ் என்ற இறுதி படைப்பு, 2007ல் வெளியானது.ஹாரி பாட்டர் கதைகளால் ஈர்க்கப்பட்டு, பள்ளி பருவத்தில் சிறந்த கதை சொல்லியாகவும், படைப்பாளியாகவும் விளங்கிய கேரளாவைச் சேர்ந்த ரீஸ் தாமஸ், இந்த நாவலுக்காக தன் 17 வயதில் செய்த செயல், அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பது சுவாரசியமான வரலாறு.கடந்த 2007ல் தன் நண்பர்களின் சவாலை ஏற்ற சிறுவன் ரீஸ், கொச்சியில் உள்ள நியூ காலேஜ் புக் ஸ்டால் என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 900 ரூபாய் மதிப்புள்ள ஹாரி பாட்டர் வரிசையின் புதிய புத்தகத்தை திருடினார்.காலங்கள் உருண்டோடின; காட்சிகளும் மாறின. இன்று ரீஸ் தாமஸ் ஓர் எழுத்தாளர். சிறு வயது முதல், 34 ஆண்டுகளாக தான் சந்தித்த அனுபவங்களை சமூக வலைதளத்தில் எழுதி வந்த ரீஸ், இன்று அதை, 90ஸ் கிட்ஸ் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.வெளியான இரண்டே மாதத்தில் இரண்டாம் பதிப்புக்கு தயாரான அந்த புத்தகம், தான் திருடிய அதே கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது ரீஸிக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், குற்ற உணர்ச்சி முந்தித் தள்ள தன் நண்பருடன் அந்த கடைக்கு அவர் சமீபத்தில் சென்றார்.தான் செய்த தவறைச் சொல்லி அதற்கான பணத்தையும் அவர் தந்துள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த கடை உரிமையாளர், ரீஸ் எழுதிய புத்தகத்தை, அவரின் கையெழுத்துடன் பெற்றுக் கொண்டார்.இது குறித்து ரீஸ் தாமஸ் கூறுகையில், அன்று புத்தகத்தை திருடியதை என் நண்பரான இயக்குனர் பசில் ஜோசப்பின் சகோதரி ஷின்சியிடம் கூறினேன்.திருடிய கடையிலேயே உன் புத்தகத்தை வைக்கும் அளவுக்கு உன்னை உயர்த்திக் கொள் என்று அன்று அவர் சொன்ன அறிவுரை, இன்று என்னை ஓர் எழுத்தாளனாக உயர்த்தி உள்ளது, என்றார்.ரீஸ் தாமஸ், பல மலையாள திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இது குறித்து அறிந்த ஹாரி பாட்டர் நாவல் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் தன் சமூக வலைதள பக்கத்தில் இந்த சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.அதில், இதை பகிர்வதால், புத்தகம் திருடுவதை ஊக்குவிப்பதாக நான் குற்றஞ்சாட்டப்படுவேன் என்று எனக்கு தெரியும். இருப்பினும், இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியடையவே செய்துள்ளது. எப்படியிருந்தாலும், புத்தகங்களை திருடாதீர்கள்; திருடுவது மோசமானது என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்