ஆங்கிலத்தில் எழுதினால் அதிக வரவேற்பு கிடைக்கிறது: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
சென்னை : தமிழில் எழுதுவதை விட, ஆங்கிலத்தில் எழுதினால், அதிக வரவேற்பு கிடைக்கிறது என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி தெரிவித்தார்.நீலம் கலாசார அமைப்பின் சார்பில், வானம் கலைத் திருவிழா - 2025 நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேர்ச்சொல் என்ற பெயரில், சென்னையில் தலித் இலக்கிய மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது.மாநாட்டில், எழுத்தாளரும், சமூக சமத்துவ படை தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமிக்கு, 2025ம் ஆண்டிற்கான, வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த, 'புதியன புகுதலும்' நுாலை, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் வெளியிட, சிவகாமி பெற்றுக் கொண்டார்.மாநாட்டில், சிவகாமி பேசியதாவது:நான் ஒரு எழுத்தாளராக பலரிடம் இருந்து எழுதக் கற்றுக் கொண்டேன். ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தி எழுதுவதில் இருந்து, கதையின் கருத்து, மையம், எழுத்து நடை என, எழுத்தின் பன்முகத் தன்மையை கற்றுக் கொண்டேன்.தலித் இலக்கியத்தை பொறுத்தவரை, அது ஒரு எதிர் இலக்கியம். சமூகத்தில் பிராமணர் உள்ளிட்ட பலரும் வேண்டும் என்பதை மறுத்து, வேண்டாம் என்று கூறுவதே தலித் இலக்கியம்.தாழ்த்தப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முறை, பண்பாடு, அவர்கள் உரிமை போன்றவற்றை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாகும். தலித் இலக்கிய வரலாற்றில், பெண்கள் விருது பெறுவது கடினம். அந்த வகையில், எனக்கு இந்த விருது கிடைப்பதில் மகிழ்ச்சி.தற்போது, தமிழில் எழுதுவதை விட, ஆங்கிலத்தில் எழுதினால், அதிக வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் மட்டும் எழுத்தாளரையும், அவரது பின்புலத்தையும் மக்கள் பார்க்கின்றனர். கதையின் கருவை பார்ப்பதில்லை.ஆனால், ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லை. மக்கள் ஆசிரியரை விட்டு, கதையின் கருவை மட்டும் பார்க்கின்றனர். அதை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இளைஞர்கள் அரசியல் கட்சியினரை நம்பினால், அவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. மாறாக, நம்மை நம்புவதன் வாயிலாக, வாழ்வின் சிறந்த இடத்தை அடைய இயலும்.அதேபோல, அரசியல் கட்சியினர், நம்மை வளைக்க இயலாத வகையில், நம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உறுதி மட்டுமே போதும்.இவ்வாறு அவர் பேசினார்.