உள்ளூர் செய்திகள்

ஏழை மாணவர் கல்வி கட்டணம் கூட செலுத்தாத தி.மு.க., அரசு எதற்கு: பழனிசாமி

சென்னை: தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால், தமிழக அரசு எதற்கு என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும், 25 சதவீத ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, மாநில அரசு செலுத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இத்தொகை செலுத்தப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்குமாறு, தி.மு.க., அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் சுய புராணங்களைப் பாடுவதில்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தீவிரமாக உள்ளார். தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, பள்ளி மாணவர்களை அனுப்பத் தவறிய முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.அ.தி.மு.க., ஆட்சியில் விளையாட்டுத் துறையில் செய்தது ஏராளம். அ.தி.மு.க., ஆட்சியில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு, பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு அனுப்பி வைத்தோம்.தி.மு.க., ஆட்சியில், பாஸ்போர்ட்டே இல்லாமல், நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன், முதல்வரும், விளையாட்டு அமைச்சரும் போட்டோ ஷூட் எடுத்தனர். இது தான் முதல்வர் ஸ்டாலினின் சாதனை.மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த முடியாத, இந்த தி.மு.க., அரசு இருந்து என்ன பயன்? மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்காமல், மத்திய அரசு மீது பழியைப் போட்டு, தப்பிக்க முயற்சிக்கின்றனர்.கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான இணையதள சேவையும், தி.மு.க., அரசால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்