உள்ளூர் செய்திகள்

அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் - கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படிக்கும் இரு மாணவர்களை, இல்லத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து, சக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். தஞ்சாவூர், ரயில்வே மேம்பாலம் அருகில், அரசு குழந்தைகள் இல்லம் உள்ளது. இங்கு, பெற்றோரை இழந்த, ஆதரவற்ற சிறுவர்கள் 77 பேர் தங்கி, அருகிலுள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர். சில மாணவர்கள், அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்கல்வி படிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள், அருகிலுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். சில நாட்களுக்கு முன், விளையாட்டு மைதானத்திற்கு சென்ற மாணவர்கள், தாமதமாக இல்லத்துக்கு திரும்பியுள்ளனர். அவர்களை இல்ல நிர்வாகிகள், உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர். மாணவர்கள் வேறுவழியின்றி, இரவு முழுவதும் ரயில்வே மேம்பால நடைபாதையில் தூங்கிஉள்ளனர். மறுநாள் காலை இல்லத்துக்கு திரும்பியபோது, இது குழந்தைகள் இல்லம் என்பதால், வளர்ந்த மாணவர்கள் தங்க அனுமதிப்பதில்லை எனக்கூறி, ஐ.டி.ஐ., மாணவர்கள் இருவரை, நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், டிஸ்சார்ஜ் ஆர்டர் கேட்டுள்ளனர். ஆனால், நிர்வாகிகள் சான்று வழங்கவும் மறுத்துவிட்டனர். மாணவர்களின் பரிதாப நிலைகண்டு, சக மாணவர்கள், இல்ல நிர்வாகிகளை சந்தித்து, அவர்களை இல்லத்தில் சேர்க்குமாறு கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இல்ல நிர்வாகிகள் மாணவர்களை அடித்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மாணவர் ஒருவர், மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, சக மாணவர்கள் மீட்டு இல்லத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து, நேற்று, மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம், மாணவர்கள், இல்ல நிர்வாகிகள் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெவித்தனர். மேலும், வெளியேற்றப்பட்ட மாணவர்களை, தொடர்ந்து, இல்லத்தில் தங்கி படிக்க உத்தரவிட கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்